சந்திர சேகர கவிராஜ பண்டிதர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
இராமநாதபுரம் சமஸ்தானம்
மானேஜர் அவர்களாகிய
பொன்னுசாமித் தேவர் மேல்
சந்திர சேகர கவிராஜ பண்டிதர்
பாடிய
தனிப்பாடல்கள்
18 பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 203 முதல் 206
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

1[தொகு]

வெண்பா

திருமகட்குத் தன்னிறமாஞ் செய்யம் புயமும்
பொருமகட்குப் பொன்னம் புயமுந்- தருபொன்னு
சாமிவள்ளன் மாலை தந்தான் தண்கமல மானேநற்
சாமிவண்ண மாலைதரா தரன்.

2[தொகு]

இய்யூர் தகர வெடுத்ததிரு மான்மருகன்
மையூர் குமரன் மலரடிக்கு- மெய்யூர்
மனத்தை யளித்த பொன்னு சாமிக்குமானே
இனத்தை மறந்தாளென் றறை.

3[தொகு]

வெறி விலக்கல்

ஆடிமாதம் பவனி யம்புயத்தா ரன்றியே
ஆடிமாதம் பார்கண் ணீர்மாற்றி- நீடுமயல்
போக்குமோ வன்னாய் புலவர் மிடியைக் கொடையா
னீக்கு பொன்னுசாமி நிருபன்.

4[தொகு]

பின்முடுகு வெண்பா

பொன்னாரம் பூணும் பகழ்ப் பொன்னுசாமி வள்ளல்
துன்னாநாள் ராமன் துயர்புரிவான்- மன்னளிதேன்
நக்கரும்பு மற்கரும்பு நற்கரும்புங் கைக்கொளும் வேள்
எற்கரும்புண் ணுய்க்க வெய்வனே.

5[தொகு]

அளகைப் பொறித்த கொடி யண்ணலடி போற்றும்
அளகைக் கோனாம் பொன்னுசாமி- துளிமதுத்தார்
தந்தான் மதனடங்கத் தண்மதியந் தானடுங்க
இந்தாவிந்தா முகத்தா யீது.

6[தொகு]

புறங்காட்டல் கட்டளைக்கலித்துறை
செவ்வேறிதழ் தரன் மாமலர்ச் சேவடி சிந்தை செய்யும்
தெவ்வேறிகல் பொன்னுசாமி பூபாலனற் சீர்க்கிரிவாய்
வெவ்வேறின மணிமேவ முதக்கடனீர் மறைத்து
உவ்வேறின மதகவ்வினைக் காட்டலென் னொண்டொடியே.

7[தொகு]

கைக்கார் நிதிதரு தேனு சிந்தாமணி கன்னன் கார்த்தி
கைக்கார் நிகரலவாங் கொடையோன் பொன்னுசாமி கடக்
கைக்கார் வரையில் பவனி வந்தான் கண்டுமால் கொள்காரி
கைக்கார் துணை புரிவார் இறவாது கருணை செய்தே.

8[தொகு]

கலிப்பா

என்றுகண்ட விந்துவைப் போலிவன் முகஞ் சோர்ந்தாள் அம்மா
என்றுகண்ட னம்பாலு மெனவயிலாள் என்கண்ணே
என்றுகண்டங் கம்ம வழைத்திடி முறையாக் கிளிக்கே
என்றுகண்டன் னீர்தடுப்பா யெழிற் பொன்னுசாமி மன்னா.

9[தொகு]

வாராக் கொங்கை மிரைமருவ பொன்னுசாமி வள்ளல்
வாராரா வெல்லா மதியழலாந் தென்ற லன்றில்
வாரார் கலியொலியும் வருத்தமன நொந்தனள் சொல்
வாரார் நீயல்லால் அம்மன்னர் பெருமான் தனக்கே.

10[தொகு]

போதம்புடனே மதியளி நற்பூங் குயிறென
வாதம்புரி துயரால் வாடுமிவளைப் புரப்பாய்
போதம்புர மெரித்தோர்க் கோதும்வேள் பொற்கமல
பாதம்புனை பொன்னுசாமி யெனும் பார்த்திபனே.

11[தொகு]

கட்டளைக் கலிப்பா
அச்சுபோற் புலவோரை மதித்திடும் அண்ணலே பொரு மங்கசன் வாளியாம்
நச்சுப்போது துரக்கத் துரந்தன ணாணும்பூணுந் துகிலும் இவடனங்
கச்சுப்போனதுங் காணான் முகவைவாழ் காவலா வளகேச விவள்கண்டுங்
கைச்சுப்போனது முண்டிலள் கெண்டைநேர் கண்ணியைப் புரப்பாய் பொன்னுசாமியே.

12[தொகு]

அத்திக்கத்த வடுத்துக் கராவினை யட்டவாழி நெடுமான் மருகனற்
சத்திக்கத்தன் சந்தாசலச் செந்தூர்வாழ் தாருகாரி வலாரி மகண கைப்பத்தி
முத்துக்குறத்தி மணாளனைப் பணியுநம் பொன்னுசாமி மகிபனைத்
தித்திக்கத் தகுமென் மொழிகூறி நீசேரச் செய்திடுவாய் மடக்கிள்ளையே.

13[தொகு]

ஆரம்பூணும் வரைக்குய மீதிலே யனங்கவேட னலர்க்கணை தூவவே
ஆரம்பூண் உண்டுகிலுந் துயிலு நல்லம்மனை கழங்கும் மடக்கிள்ளையும்
ஆரம்பூணுந் தறந்துமெய் சோர்ந்தனள் அவளைக் காத்தணைத்து ஆளவதுன் பாரமே
ஆரம்பூணுடை நற்குந்த வீரனே யண்ணலே பொன்னுசாமி குபேரனே.

14[தொகு]

எங்குந்தம் புகழோங்க வளித்த மூவேழு வள்ளல்களும் இவனீகையால்
தங்குந்தங்கு மிவற்கே புகழெனச் சாற்றுஞ் சற்குணனாம் பொன்னுசாமிமா
தங்கமேற் கொடுபோந்தன னோர்தினஞ் சாரும்வீதியிற் கண்டார் மயல்கொடு
சங்குந்தங் கலையுந் தரியாது உளந்தளர்ந்து நாணமுந்தாம் இழந்தார்களே.

15[தொகு]

மட்டுத்தார்க் கணையான் மதன்மாதினை வருத்தத்தான் மனநொந்து மயங்கிப்பொற்
கட்டுத்தார்ப் புரவிக்கொரு வீரநின் கருத்துத் தானிரங்கிப் புயமேவுபூ
மொட்டுத்தார் தரவாங்கி வரச் சொன்னாண் முத்தத்தார் நிரையொத்த முறுவலாள்
கட்டுத்தான் உரையாமலரு ளரிச்சந்திரனே பொன்னுசாமி நரேந்த்ரனே.

16[தொகு]

பாலனத்தை விடுத்து நின்கண்ணிவள் பாலனத்தை விடுத்தனள் வேணுகோ
பாலனத்தை யுடையோன் மருகன்கோ பாலனத்தை யல்பாகனருள் பரன்
பாலனத்தை யணிநாசி வள்ளி கோபாத பற்பம் பணி பொன்னுசாமிநீ
பாலனத்தைப் புரிசிலை மாரனம்பால் வருத்தப் படாமலிப் பாவையே.

17[தொகு]

விருத்தம்

மானேசரந் தொடுத்த மதனங்கம் விழித்து எரித்தோன் மான்மலர்க்கோ
மானேசாதவர் பரவும் பரனன்பன் சேதுபதி மன்னன் வாயில்
மானேசராம் பொன்னுசாமி வள்ளல் என்னை யவர்மருவ நல்ல
மானேசராகும் வகைநீ புரிந்தால் இவ்வுலகில் வாழுவேனே..

18[தொகு]

கொச்சகக் கலிப்பா

சுரர்க்கோர் சவையமுதைத் தூநெடுமால் ஈந்தனன்பூ
சுரர்க்கோர் அறுசுவைசேர் தூவமுதை யீந்தனைநீ
மண்டலத்தின் மூன்றடிமண் வாயிலிரந்தான் றீனர்கள்க
மண்டலத்தி நல்குரவு மாறநிதி சொரிந்தனைநீ.

இதுதரவு –எனவாங்கு தனிச்சொல்
கக்கரத்தான் நிருதர்களைத் தான் றுணித்தான் அரணனஞ்
சக்கரத்தான் உட்பகையைத் தான் றுணித்தாய் நீசபையில்
எல்லார் வளைக்காடை யீந்தரி மானங் காத்தான்
எல்லார்க்கு நீயாடை யீந்தபிமானங் காத்தாய்
நல்லாரணி கவர்ந்தான் நாராயணன் அறிந்த
நல்லார் அணியவணி நல்கினைநீ நானாலத்தில்.
இவைமூன்றுந் தாழிசை
வான் றருவெனவே வழங்கு கொடையோய்
மீன் றருகண்ணினள் விழைவெனு நறவை
உண்டு களித்தே யொளிவளை சோரக்
கண்டு பாலனமுங் கொண்டிவ ளணைமேற்
கண்டுயிலாது தொண்டை வாய் துடிப்பக்
காவிநீர் வார வோவியம் போன்றனள்
கருப்புக் கழையைக் குழைத்ததுத் தேற்றுளி
அருப்புக் கணையை விடுத்தனன் அனங்கவேள்
வெம்புலி யேறென விண்மிசை யூர்தரும்
அம்புலியோ விவளாலி மேற்றாவின
தோவறு தென்றலுங் காவுறு குயிலும்
தண்ணுறுஞ் சிந்தும் பெண்ணை வாழ் அன்றிலும்
சந்தத முடற்றும் வெந்துயர் தணிப்பாய்
நன்னயவி ராமநாத புரம்வாழ்
பொன்னுசாமி யெனும் பூபதியே.