பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

காற்றில் வந்த கவிதை

ஆத்துக்கு இந்தப்புறம்-அத்தை மகனே
அண்ணன் வைத்த தென்னம் பிள்ளை-அத்தை
மகனே
ஆத்தைத்தான் தாண்டுவேனே-அத்தை மகனே
அண்ணனைத்தான் தள்ளுவேனே-அத்தை மகனே
சாலைக்கு இந்தப்புறம்-அத்தை மகனே
தம்பி வைத்த தென்னம்பிள்ளை-அத்தை மகனே
சாலையைத்தான் தாண்டுவேனே-அத்தை மகனே
தம்பியைத்தான் தள்ளுவேனே-அத்தை மகனே

அத்தை மகளை உரிமைப் பெண் என்று கூறுவார்கள். அவளைக் கலியாணம் செய்துகொள்ள உரிமை இருக்கிறதாம்! உரிமைப் பெண்ணை உரியவனுக்குக் கலியாணம் செய்து கொடுக்க மறுக்கும்போது கிராமங்களிலே பெரிய பெரிய மனத்தாங்கல்கள் ஏற்படுவதுண்டு.

அத்தை மகளைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஒருவன் ஆசைப்படுகிறான். அவனுடைய ஆசையை ஒரு நாட்டுப் பாடல் அழகாக வெளியிடுகின்றது.

அத்தைமகள் ரத்தினத்தைக் கட்டலாமா
அழகான தாலிபண்ணிப் போடலாமா
குன்றிமணிச் சீலைவாங்கிக் கொடுக்கலாமா
கூசாமல் கைகோத்து நடக்கலாமா