1. இதழ்கள்
இரண்டு தடவை குரு எட்டி எட்டிப் பார்த்துவிட்டுப் போனான்.
‘பிருகா எங்கே?’
‘யார் கண்டா? இங்கேதான் எங்கேயாவது வெய்யில் வீணாய்ப் போகாமல் அலைஞ்சிண்டிருக்கும்.’ அடுப்பில் கிளறிக் கொண்டிருக்கும் பண்டத்திலிருந்து ஆவியடித்து; சின்னாவுக்குக் கண்கள் தஹித்தன. ‘அடியே! அடுப்பு ஒழிஞ்சு போறது. குழந்தையை சற்றே பிடியேண்’டின்னு கெஞ்சறேன், காதிலே வாங்கிக்காமலே போயிடுத்து. வரட்டும் வரட்டும் சொல்றேன் காலை ஒடிச்சுப் போட்டுடறேன். கட்டை துளுத்துப் போச்சு. இன்னும் மாசாந்திர மண்டகப் படி அவளுக்கு ஆகல்லே. வரவர அது அடிக்கற ‘லூட்டி’ தாங்க முடியல்லே—’
‘சரி சரி; நான் ஏதாவது கேட்டால், நீ ஏதாவது சொல்லிண்டிரு.’
‘ஒரு ரெண்டு நிமிஷம் நீங்கள்தான் தூக்கிக்கோங்களேன். தொண்டையைக் கிழிச்சுக்கறேனே, உங்களுக்கு மாத்திரம் காது கேக்கல்லையா?’
‘காது கேட்கத்தான் இல்லே. உன் இரைச்சலில் செவிடாய்ப் போய்விட்டது. அட பயலே, என்னடா கத்தறே? உங்கம்மாவோடு போட்டி போடறையா, போட முடியுமாடா? அப்பாவைக் கண்டதும் பாப்பாவுக்குக் கை கால்கள் பரபரத்தன. ‘குகுகுகுகூ — பெப்பே’ — அதன் வாயில் சப்தங்கள் குழறின. தூக்கினதும் சந்தோஷம் தாங்கவில்லை. கொக்கரித்துக் கொண்டு ‘பட்பட்’ என இறக்கைகள் போல் கைகளை அப்பா முகத்தில் அடித்து, குருவின் மூக்குக் கண்ணாடி கோணிச் சரித்தது.
இ-1