பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

செம்மொழிப் புதையல்


உருவங்களைப் பெற்று, முடிவில், இற்றைய உருண்டை வடிவத்தைப் பெற்றிருக்கிறது. சுழலலாவது நின்றுபோமாயின், இந்நிலவுலகம் யாதாய் முடியும்? ஒருசார் பகலும் மற்றைய பகுதி இருளுமாய் எவ்வுயிரும் வாழ்தற்கின்றி, எப்பொருளும் நிலைபெறுவதின்றிக் கெட்டழியுமென்பதனைச் சொல்லவும் வேண்டுமோ அளித்தக்க இம்மண்ணகம், இடையறவின்றிச் சுழன்றுழலும் உழைப்பினால்தான் இதன்பால் முறை திரும்புதலும், நேர்மை கோடுதலும் பிற தீமைகளும் இலவாயின; விகாரங்கள் நீங்கிச் சீரிய இவ்வுருவமும் அமைவதாயிற்று.

குலாலனதுழைப்பும், அவனது தண்ட சக்கரமும் மனிதன் உணவட்டு உண்ணத்தொடங்கிய நாண்முதல் அறிந்தனவாகும். சமய நூல்களும் இலக்கண நூல்களும், அவனையே அவன் செய்யும் வினையையும், வினைக்குரிய கருவி கரணங்களையும் அடிக்கடி எடுத்துக்காட்டித் தம் அறிவுப் பொருளை வழங்குகின்றன. அச்சக்கரத்தின் நடுவில் வைக்கப்படும் மண்திரளைப் பாருங்கள்! அதனிடத்தில் ஏதேனும் பாண்டவமைப்புக்குரிய வடிவமுளதோ? அழகிய உருவமும் திருந்திய வடிவமுமுடைய மட்கலங்கள் அச்சக்கரத்தின் சுழற்சியால் பிறக்கின்றன. அஃது இல்லையாயின் அக்குலாலன் மட்கலன்களை யாக்குதல் கூடுமோ? எத்துணைத் தொழிற்சிறப்பும், உலையாவுழைப்பு முடையனாயினும் அவன் யாதுசெய்ய முடியும்? அவன் செய்ய முயலும் கலங்கட்கு அழகும் வடிவும் அமையுங்கொல்! இயற்கையுலகும், சக்கரத்துணையில்லாத குலாலனைப்போல, ஓய்ந்து ஒடுங்கி நிற்குமாயின் அதன் பயன் என்னாய் முடியும்! அவ்வாறு செய்யாது சலிப்பின்றி, உழைக்குமாறு அருளிய ஆண்டவனை எப்போதும் வணங்குவோமாக. உழைத்தலின்றிச் சோம்பிக் கிடக்கும் ஒருவன் எத்துணைப் பொருணலங்கள் உடையனாயினும், அவற்கு அவை ஒரு பயனையும் செய்யா. சகடசக்கரமின்றிக் கையற்று நிற்கும் குலாலன்பால் உள்ள மண்திரள் போல, உழைப்புச் சிறப்பில்லாத ஒருவனும் வெறுந்தசைப் பொதியும் சிறப்பில் பிண்டமுமாவதல்லது பிறிதில்லை. குலாலனை மகனாகவும், அவனது சக்கரத்தை உழைப்பாகவும் கொண்டு நோக்குக. உழைப்பு உயர்வு தரும்; உழைப்பாளி உலகாள்வான். ஆகவே, உழைப்புப் பெற்றவன்