பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

155


திளைக்கும் தனித்ததொரு வீட்டில் தாயன்பு மீதூர வளர்ச்சி பெற்றிருந்தால், அவர்கள் உலகை வேறுவிதமாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். உழைப்பு, தன்னலம் கருதா மேன்மை ஆகிய குணங்கள் இயல்பில் படிந்துவிட்டிருக்கும்.

மூத்தவன் ஒழுங்கு பாலிப்பதில் தாய் சொல்லைக் கேட்டு நடப்பவனாக இருந்தாலும், இளையவன் கோடுகளைத் தாண்டிச் செல்வதில்தான் கருத்தாக இருந்தான். கல்வி ஒழுக்கம் என்ற கருத்தோ, நாட்டமோ அவன் மனதைத் தீண்டவேயில்லை எனலாம்.

செல்வக் குடும்பங்களில் உதித்த சிறுவர்களுக்கும், அரசிளங்குமரர்களுக்குமே பெரும்பாலாகக் கல்வி பயிற்றிய டேராடூன் பள்ளிக்கு இச்சிறுவர்கள் அனுப்பப்பட்டனர். தான் பிரதமரின் பேரப்பிள்ளை என்ற மிதப்பில், சஞ்சயின் அத்துமீறும் செயல்கள் பள்ளி ஆசிரிய நிர்வாகிகளுக்கு தலை வேதனையாயிற்று. இந்திரா, வேறு வழியின்றி அவன் பள்ளிப் படிப்பை முடிக்காத நிலையிலேயே அவனை டெல்லிக்கு அழைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ராஜீவுக்குத் தந்தையின் இயந்திர-தொழில் நுட்பவியல் ஆர்வம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. சஞ்சயோ, அந்த வயசிலேயே ‘அரசியல்’ நாட்டம் கொண்டவனாக, லோக் சபாவில் பார்வையாளர் காலரியில் இருந்து தந்தையை மிக உன்னிப்பாகக் கவனித்தான்.

இந்தப் பையனை உருப்படியாக்க, மேலே தொழில் நுட்பக் கல்வியோ, பயிற்சியோ அளிக்கலாம் என்று முடிவு செய்தார் இந்திரா. உள்நாட்டில் எங்கே கல்வி பயில அனுப்பி வைத்தாலும், பிரதம மந்திரியின் பேரர்கள் என்ற சார்பை மீறி, சுயச்சார்பும் தனித்துச் செயல்படும் திறமையும் வளருவது அசாத்தியம். குறிப்பாக சஞ்சயனுக்கு அந்த எண்ணம் அகல வேண்டும். எனவே பையன்களை வெளி நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்து, இந்திரா தீவிரமாக இருந்தார். இங்கிலாந்துக்கு அனுப்பப் பெற்றனர்.