10
இதழ்கள்
‘போடுடா போடு, இன்னும் ரெண்டு போடு!’ எதிர்த் கட்டுப் பாட்டி தாழ்வாரத்திலிருந்து கத்தினாள்.
‘என்ன பாட்டி இப்பவே பழக்கிக்கச் சொல்கிறீர்களா? சின்னா, என்ன இதுக்கு இப்படி ‘ஜொள்’ கொட்டுகிறதே, ஐயே கக்கீட்டானே தூ —!’
‘உஷ்! அபராதம் அபராதம் ! கன்னத்தில் போட்டுக் கோங்காணும் ஒய்! கங்கா ஸ்தானம் பண்ணின பலன் ஒய், தேன் ஒய் தேன்!!’
‘சாப்பிட வரலாம்-!’
குரு குழந்தையைத் தொட்டிலில் விட்டான். உடனே அது முகத்தைக் கசக்கிக்கொண்டு அழுகைக்கு ஆயத்தமாய், உறும ஆரம்பித்தது.
‘என்னமோ நமாஸுக்குக் கூப்பிடறமாதிரி கத்தினையே, தாலம் கீலம் கிடையாதா? இல்லை, ‘உங்கம்மாவுக்குப் பிறகு நான்தான்’ என்று கையில் பிசைந்து போடப் போகிறாயா?’
‘இப்படி நெருப்பு மிதிச்சா என்ன பண்றது? சாப்பிட வரலாம்னா சமையலாச்சுன்னு அர்த்தம்.’
‘ஓஹோ ! அப்போ தட்டுப் போட்டாச்சு என்றால் சாப்பிட்டாச்சு என்று அர்த்தமாக்கும்! அப்போ நான் சட்டையை மாட்டிக்க வேண்டியதுதான்.’
‘என்ன இப்படி முரண்டறேள் இன்னிக்கு? இந்த ஒன்பது மணிக்குள் ஏன் இப்படி கொள்ளை போறதோ?’
‘அப்புறம் நாயும் நரியும் ஒடறதே, அதையும் ஞாபகம் வைக்கனும்!’
‘எல்லாம் சொல்ல வேண்டியதுதான். சொல்றவாளுக்கென்ன? இந்த மாதிரி குழந்தைகளைப் பெற்றுவிட்டு ஓய்ச்சலேது, ஒழிவேது? என் முதுகு பிளக்கிறது எனக்குன்னா தெரியும்? இடத்தைப் பெருக்கி இலையைப் போடறேன். அது வரைக்கும் பாப்பாவை ரெண்டு நிமிஷம்—’
‘சின்னா நீ மணிக்கணக்காய் நிமிஷங்களை கொசுறிக் கொண்டிரு, ஒரு நாளைக்கு என்ன நேரப் போகிறது தெரியுமா?’
‘தெரியல்லியே என்ன? ’