பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொள்கிற காலத்தில் அரசர்களுக்காக யாகங்கள் செய்து, அரசர்களது புகழை வளர்க்க இவர்கள் புரோகிதர்களாக மாறினார்கள். அப்பொழுதும் பல தெய்வ வணக்கத்தை மேற்கொண்டு கடவுளை எதிர்த்தார்கள். இவர்களே பூர்வ மீமாம்சகர்கள். இவர்களுடைய கருத்துக்கள் வளர்ச்சியடைந்த நாத்திக சிந்தனையாகும்.
நியாய வைசேசிகர்களுடைய நிலை சந்தேகத்துக்கு இடம் தருவது.
பெளத்தம் கடவுளையும் ஆன்மாவையும் மறுக்கிறது. ஜைனர்களுடைய கொள்கை சந்தேகமானது. எனினும் அவர்கள் தங்கள் சமயத்தைப் போதித்த 23 தீர்த்தங்கரர்களின் அறிவையே தெய்வமாகக் கருதினர்கள்.
எனவே இந்திய நாத்திகம் பல்வேறு கொள்கைகளையுடைய பலவிதமான சமயக் கொள்கைகளை உடையவர்களோடு நேச உறவு கொண்டிருந்தது. இதிலிருந்துதான் அதன் பலவீனம் தோன்றுகிறது.
ஆனால் இந்திய நாத்திகர்களது பொதுவான தருக்கம் இதுதான். தவறான தருக்க முறைகளால்தான் ‘கடவுள்’ என்ற கருத்தையடைய முடியும். கடவுள் என்ற கொள்கை பொய்யான ஒரு நம்பிக்கையை நிஜம் என்று கருதுவதுதான். இந்தப் பொய்யை, பொய் என்று நிரூபிப்பதே இந்திய நாத்திகத்தின் கடமையாக இருந்தது.

கடவுள் இல்லையென்றால், கடவுள் என்ற பேரின் மீது தோன்றி வளர்ந்துள்ள, அடிமரம், கிளைகள் போன்ற வேறு நம்பிக்கைகளையும் உதறித்தள்ளியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடவுள் என்ற ஒரே ஒரு நம்பிக்கையைப் பொய் என்று நிரூபிப்பதிலேயே அவர்களது சிந்தனை முயற்சியெல்லாம் குவிக்கப்பட்டிருந்தது. வேறு நம்பிக்கைகளான, நரகம், சுவர்க்கம், விதி என்பனவற்றை அவர்கள் மறுக்கவில்லை. இதற்கு ஒரு உதாரணம், கடவுளே மறுத்த மஹாயான பெளத்த விகாரைகளின் (பெளத்த மடங்களில்) சுவர்களில் பற்பல பேய்கள், பிசாசுகள், ஆவிகள், சிறு