பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

பெற்றிருந்த உரை வேந்தருக்கு, இவ்விருவரின் நட்பால், அவற்றில் ஈடுபாடு மேலும் மிகுந்தது!

அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் இருந்தபோது, 'புறநானூறு போன்ற பல சங்க இலக்கியங்கட்கு விளக்கவுரை எழுத முடிந்தது! பிற்காலத்தில் உரைவேந்தர்' என்ற பெரும்புகழ் பெறுதற்கு அடித்தளமாக அமைந்தது இங்கேதான் என்று கூறினும் மிகையாகாது!

தியாகராசர் கல்லூரிப் பணி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் போலவே, அன்னைத் தமிழின் வளர்ச்சிக்கு ஒருநிலைக்களனாக விளங்குவது மதுரையில் உள்ள தியாகராசர் கலைக்கல்லூரி, 'கல்வித் தந்தை' எனப் போற்றப்படும் கருமுத்து. தியாகராசச் செட்டியாரால் நிறுவப் பெற்றது. அவர் தொடங்கிய தமிழ்நாடு' என்னும் நாளிதழ், நாட்டு மக்களிடையே நல்ல தமிழைப் பரப்பியது உலகறிந்த செய்தி. தமிழின்பால் அளவிறந்த பற்றுக் கொண்ட இவர், தமிழ்ப்புலமை பெறவேண்டும் என்பதற்காகவே, புலவரேறு அ. வரதநஞ்சைய பிள்ளை என்னும் தமிழ்மேதையை வரவழைத்துத் தமது மாளிகையில் ஒரிடம் தந்து இருக்கச் செய்து, அவருக்கு உணவு முதலான பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து, அவர்பால் தமிழைக் கற்றார் எனின், கருமுத்து'வின் ஆழ்ந்த தமிழுணர்வை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். அவ்வாறே தியாகராசர் கல்லூரியிலும் தமிழில் நன்கு புலமை பெற்ற பேராசிரியர்களைத் தாமே நேர்முகக் காண்டல் மூலம் அறிந்து, பணியில் அமர்த்தியவர். தமிழ்ப் பேரறிஞரும் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமாணவருமான முனைவர் அ.சிதம்பரநாதச் செட்டியாரைக் கல்லூரி முதல்வராக ஆக்கினார். முனைவர் சி.இலக்குவனார், முனைவர் மா. இராசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் அ.கி. பரந்தாமனார் போன்றோர் இக்கல்லூரித் தமிழ்த் துறையை அணிசெய்த பெருமக்களாவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த உரைவேந்தரை, விரும்பி வரவழைத்துத் தம் கல்லூரியில் பேராசிரியப் பணி தந்து பெருமை பெற்றவர் 'ஆலை அதிபர்' கருமுத்துச் செட்டியார்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகிய உரைவேந்தர், இக்கல்லூரியில் 1951 சூலைத் திங்களில் பணியிலமர்ந்தார்.