பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



54

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

வகையில், அப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்டு, தமிழ் இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்ந்து வெளியிடுவதெனத் திட்டம் வகுத்து அதன்படி நூல்களை வெளியிட்டனர். அவ்வகையில் வெளிவந்ததே ‘சைவ இலக்கிய வரலாறு’ என்னும் நூல்!

பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறையில் பணிபுரியும் ஆசிரியர் களைக் கொண்டு ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதும் பணி உருவாயிற்று. அவ்வகையில், ஆங்குப் பணியிலிருந்த உரை வேந்தருக்குச் சைவ இலக்கிய வரலாறு எழுதும் பணி அளிக்கப்பட்டது.

இந்நூலுக்கு அரியதொரு முன்னுரை வழங்கியுள்ளார் உரைவேந்தர். அதில் வரும் சில பகுதிகள்:

“இலக்கியங்கள் பலவும், தாம் தோன்றிய காலத்து மக்கட் சமுதாயத்தின் சூழ்நிலையை எடுத்துக் காட்டும் இயல்பின என்பது அறிஞர் உலகம் நன்கறிந்த செய்தி. அந்நெறியில் சைவ லக்கியங்கள், தாம்பிறந்த காலத்து வாழ்ந்த சைவமக்களின் சமய உணர்வு ஒழுக்கங்களைத் தம்மைப்பயில்வோர்க்கு உணர்த்தும் அறக் கருவூலங் களாகும். ஆயினும் இவ்விலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவைதோன்றிய காலத்து, நாட்டு வரலாற்று அறிவு பெருந்துணையாகும். அக்காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல், பொருளியல், வாணிபம், தொழில் முதலியவற்றை உரைக்கும் நாட்டுப் பொது வரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று. நம் தமிழ் நாட்டின் தவக்குறைவாலும் தமிழ் மக்களின் ஊக்கமின்மையாலும் அத்தகைய பொது வரலாறு ஒன்று இதுகாறும் எழுதப்படவே இல்லை!”

‘சைவ இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூலில், உரைவேந்தர் எடுத்துக் கொண்ட பகுதி, கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு முடிய அமைந்த காலமாகும். சிறந்த செந்தமிழ் நூல்களாகிய சைவ இலக்கியங்கள் பற்றிய செய்திகள், தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பிறநாட்டார் யாத்திரைக் குறிப்புக்கள் முதலிய வரலாற்றுச் சான்றுகள் கொண்டு தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன.