பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சைவ இலக்கிய வரலாறு

யையும் துறந்து சமணரானது, திலகவதியார் உள்ளத்தில் பெருங் கலக்கத்தை விளைவித்தது. அண்மையிலுள்ள திருவதிகையை அடைந்து திருமடமொன்றை அமைத்துக் கொண்டு, திருவதிகைக் கோயிலில் நாளும் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல் முதலிய திருப்பணிகளைச் செய்து வரலானார். நாட்கள் திங்களாயின; திங்கள் யாண்டுகளாயின; பல ஆண்டுகள் கழிந்தன.

நடுநாட்டை ஆண்ட வேந்தனை முதல் மகேந்திரவன்மன் சமண் சமயத்தை மேற்கொண்டு அதனைப் பெரிதும் ஆதரித்து வந்ததனால், அவன் காலத்தே திருப்பாதிரிப்புலியூர் சமண் சமயத்தவர்க்குச் சிறந்த இடமாய் விளங்கிற்று என்பது முன்பே கூறப்பட்டது. அங்கிருந்தே சமண் துறவிகள் தங்கள் சமயத்தை நாட்டில் பரப்பி வந்தனர். வேந்தனும் சமணனாய் இருந்தமையின் அரசியற் சலுகை பெற்ற சமண் சமயம் சிறப்புறுவதாயிற்று. இக் காலத்தே தான், தென்பாண்டி நாட்டிலும் சமண் சமயம் அரசு கட்டிலேறி ஆட்சி புரிந்து வந்தது.

திருப்பாதிரிப்புலியூரில் தருமசேனராய் விளங்கிய மருணீக்கியார்க்குச் சூலை நோயுண்டாயிற்று. அது நீங்குதற்குரிய முயற்சிகள் பலவும் பயன்தாரா தொழிந்தன. முடிவில் ஒருநாள், அவர் திருவதிகை அடைந்து தன் தமக்கையாரைக் கண்டு அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி நோய் தீரும் வகை அறியாது திகைக்கும் தம் திகைப்பைத் தெரிவித்துக் கொண்டார். திலகவதியார், உடனே திருவதிகைப் பெருமானை வணங்கி அவர் திருப்பெயரைச் சொல்லித் திருநீறணிவித்து அப் பெருமானை வணங்கித் தனது குறையைச் சொல்லிப் பாடிப்பரவச் செய்தார். மருணீக்கியார், “கூற்றாயினவாறு விலக்ககிலீர்”[1] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். இதன்கண், “சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்” [2] “வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்” [3] என்று குறித்திருப்பது இவ்வரலாற்றை வற்புறுத்துகிறது.


  1. திருநா. 1 : 1.
  2. ௸ 1 : 4
  3. ௸ 1: 7.