பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பாஸ்கரத் தொண்டைமான்



4
இன்னமும் சின்னவன் தானா?


ஒரு தமிழ்க் கவிஞன், தமிழ்க் கடவுள் முருகனிடத்து அளவிறந்த பக்தியுடையவனாக வாழ்கிறான். முருகன் என்றால் அழகன், இளைஞன் என்றெல்லாம் அறிகிறான் என்றும் இளையாய், அழகியாய் என்றெல்லாம் பாடிய கவிஞர் பரம்பரையிலே வந்த கவிஞன்தானே இவன். கவிஞன் என்ற உடனேயே அவனுக்கு முன்னே அவன் வறுமை போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்குமே. வறுமையால் நலிகிறான். வீட்டிலோ மனைவி மக்கள் எல்லாம் உண்ண நல்ல உணவின்றி, உடுக்க நல்ல உடையின்றி வாடுகிறார்கள். இத்துடன் வாழ்க்கையில் எத்தனையோ துயரம் அவனுக்கு. இத்தனை துயரையும் துடைக்க வழி ஒன்று உண்டு என்பதையும் அறிவான் பக்தன். தன் வழிபடு கடவுளான முருகனிடம் முறையிட்டால், அந்தக் கலியுக வரதன் தன் துயர் துடைத்து செல்வம் கொழிக்கும் வாழ்க்கை அருளுவான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். இந்த நிலையில் மனைவி வேறே கவிஞனை, 'என்ன? உங்கள் முருகனிடம் முறையிட்டு வேண்டிக் கொள்ளுங்களேன். பக்தர்கள் துயரை எல்லாம் துடைத்தவனுக்கு உங்கள் துயரத்தை நீக்குவது என்பது சாத்தியமற்ற காரியமா என்ன?' என்றெல்லாம் அடிக்கடி ஞாபகப் படுத்துகிறாள். கவிஞன் மெத்தப் படித்தவன் ஆயிற்றே. அவனுக்கு ஒரு சந்தேகம், இந்த முருகன் சின்னஞ்சிறு பிள்ளைதானே. அன்னை மடிமீது தவழும் இந்த இளவயதில் அவள் அமுதுட்டினால்தானே உணவருந்தத் தெரியும். அவனோ தாய்க்கு அருமையான பிள்ளை. அதனால் அவள் அவன் கண்ணுக்கு மையிட்டு, நெற்றிக்குப் பொட்டிட்டு, அழகு பார்த்துக் கொண்டே இருப்பாள் அடிக்கடி எடுத்தணைத்து முத்தம் கொடுப்பாள் கொஞ்சலாகக் கன்னத்தைக் கிள்ளி விளையாடுவாள்.