பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பாஸ்கரத் தொண்டைமான்



ஆவினன் குடியில் உள்ளவனையோ அவன் பெருமைக்கு எல்லாம் மேலான பெருமையுடைய பழநி ஆண்டவனைப் பற்றியோ அதிகம் கூற வேண்டியதில்லை. எண்ணியது எண்ணியாங்கு எய்தும் வகையில் அருள்புரியும் கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுபவன் அல்லவா? ஆதலால் நாமும் அங்கு சென்று விழுந்து வணங்கித் திரும்பலாம்.

இனித்தான் சோழநாட்டில் புகவேண்டும் சோழ நாட்டில் உள்ள கோலக்குமரர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்தவன் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதனே. அவன் தந்தைக்கு குருவாக அமைந்தவன் ஆயிற்றே. பிரணவப் பொருளைத் தந்தையாம் சிவபெருமானுக்கே உபதேசிக்கும் ஆற்றல் பெற்றவன் என்றல்லவா புராணங்கள் பேசுகின்றன. இந்த சுவாமி மலைதான் அன்றைய ஏரகம் என்பர். அவனையே ஏரகத்து உறைதலும் உரியன் என்று நக்கீரர் பாடியிருக்கிறார். அங்குள்ள சுவாமிநாதனையும் வணங்கலாம். அதிலும் அவனை ராஜகோலத்தில் அலங்கரித்து இருக்கும் போது கண்டால் ‘ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டல மீதே மனோகர ராஜகம்பீர நாடாளும் நாயகன்’ என்று அருணகிரியார் பாடியதின் பெருமையையும் அறியலாம்.

சரி, ஆறில் ஐந்து தலங்கள் சென்று விட்டோம். கடைசியாக எங்கு செல்வது என்பதுதான் பிரச்சனை. இந்த நக்கீரர் கடைசியாக குன்றுதோறாடும் குமரர்களிடம் அல்லவா நம்மை ஆற்றுப் படுத்துகிறார். குன்றுதோறாடும் குமரர்கள் ஒன்றா இரண்டா, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குன்றின் பேரிலும் தான் ஒரு குமரன் கோயில் இருக்கிறதே. தெற்கே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமரகோயிலிலிருந்து வடக்கு நோக்கி நடந்தால், திருமலையில் ஒரு முருகன், மயிலத்தில் ஒரு முருகன், செங்கோட்டில் ஒரு வேலன் என்றெல்லாம் வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குன்றுதோறாடும் குமரர்களில் சிறந்தவன் ஒருவனைக் காணவேண்டும் என்றால் திருத்தணிகை செல்ல வேணும். இத் தணிகை மலை சமீபகாலத்தில் தான் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவோ காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டுடன் இணைந்திருக்க வேண்டிய இத்தணிகை ஏன் இவ்வளவு காலம் கழித்து இணைந்தது என்று ஏங்கும் நம் உள்ளம். இதே ஏக்கம் அன்று அருணகிரியாருக்கும் இருந்திருக்கிறது. அந்த ஏக்கத்தைத்தானே.