38
பாஸ்கரத் தொண்டைமான்
அவ்வளவுதான், இறைவன் திரு உலா வந்த போது காற்றும் மழையும் கலந்தடித்து அல்லோலகல்லோலப் படுத்தியிருக்கிறது. பல்லக்குத் தூக்கியவர்களோ மேலே செல்ல இயலாதவர்களாய்ப் பக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்திலேயே பல்லக்கை இறக்கி விட்டு உட்கார்ந்து விடுகிறார்கள். மழை நின்று புயல் ஓய்ந்தபின் பார்த்தால் பல்லக்குத் தங்கியிருக்கின்ற மண்டபம், பிள்ளையன் மண்டபமாக இருப்பதைக் காண்கிறார்கள். கட்டபொம்மன் தன் தவறை உணர்கிறார். பிள்ளையனிடம் மன்னிப்புக் கோருகிறார். பிள்ளையனும் ஐயன் கருணையை நினைந்து நினைந்து உருகுகிறார்.
இன்னும் ஒரு வரலாறு. ஆங்கில அன்பர்கள் சிலரையும் ஆண்டவன் பெற்றிருந்தான் என்பதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே திருநெல்வேலியிலே கலெக்டராக இருந்தவர் லஷிங்டன் துரைமகனார் (S.R.Lushinglion). அவரை, ஆண்டவன் ஆட்கொண்டிருக்கிறான். 1803ம் வருஷம் அவர் வெள்ளிப் பாத்திரங்கள் பலவற்றை இக்கோயிலுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அத்துடன் இவர் திருச்செந்துரை அடுத்த வீரபாண்டியன் பட்டினத்திலேயே ஒரு பங்களாக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழர் தெய்வமான முருகன் ஆங்கிலேயர்களையும் தன் அன்புக்கு ஆளாக்கி இருக்கிறான் என்று காண்கிறோம் இவ்வரலாற்றில் இருந்து.
கொங்கணர் ஆரியர் ஒட்டியர்
கோசலர் குச்சலர் ஆம்
சிங்களர் சோனகர் வங்காளர்
ஈழர் தெலுங்கர் கொங்கர்
அங்கர் கலிங்கர் கண்ணாடர்
துருக்கள் அனைவருமே
தங்கள் தங்கட்கு இறை நீ
என்பர் பேரரிச் சரவணனே