பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பாஸ்கரத் தொண்டைமான்


சொக்கி மரமாக நின்ற முருகன், வேறு எந்த நாட்டுப் பெண்களையும், அதிலும் மராத்தியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்க விரும்புவானா என்ன? இதை அவ்வளவு அப்பட்டமாகச் சொல்ல முடியாமல்தான் சும்மா பிரம்மச்சாரி வேஷம் போட்டு அங்குள்ளவர்களை ஏமாற்றி வருகிறான். போகட்டும், இந்தக் கலைபயில் புலவன் கார்த்திகேயன் மங்கையரைக் காண மறுக்கும் மால் மருகன் எனற புகழோடு அங்கு வாழட்டும்.

இப்படிப் பெண்களையே பார்க்க மறுக்கும் கார்த்திகேயனைக் கண்டபின்தான், தமிழ்நாட்டில் கோலக்குமரன், மலைமீதும், கடல்கரையிலும் ஆற்றங்கரையிலும் அழகிய சோலைகளிலும் கொலு இருப்பதின் உண்மை தெரியும். அழகனாகப் பிறந்து, அழகனாக வளர்ந்து அழகிய மனைவியரைப் பெற்றவன் நல்ல அழகு நிறைந்த இடங்களைத் தானே தேடித் தனக்கு வீடு அமைத்துக் கொள்வான். அத்தனை அழகுணர்ச்சி உள்ளவனாக இருப்பதினால்தானே, அவனை முருகன் என்று அழைக்கிறோம். குமரன் என்று கொண்டாடுகிறோம்.

மலைமேவு மாயக் குறமாதின்
  மணமேவு வாலக் குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
  திரு ஆலவாயிற் பெருமாளே

தமிழ்க் கடவுளான குமரனை தமிழர்கள் எவ்வளவோ காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். முருகனை வழிபடுகின்ற அளவுக்கு வேறு தெய்வங்களை அவர்கள் வழிபடுவதில்லை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே, குறிஞ்சி நில மக்கள் தங்கள், தங்கள் சிற்றூர்களிலே செவ்வேளை, காட்டில், காவில், ஆற்றில், குளத்தில் நாற்சந்திகளில் எல்லாம் வைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். மரத்தடியிலும், அம்பலத்திலும், கடம்ப மரத்திலும் கூட வைத்து வணங்கியிருக்கிறார்கள். அங்கெல்லாம் நெய்யோடு வெண்கடுகை அப்பி, மணம் நிறைந்த மலர்களைத் தூவி வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள், வழிபடுவோர் இரண்டு உடைகளை உடுத்திக் கொண்டு, சிவப்பு நூலைக் கட்டிக் கொண்டு, வெண்பொரி துவி கொழுத்த கடாவின் இரத்தத்தோடு பிசைந்த வெள்ளிய