பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பாஸ்கரத் தொண்டைமான்



கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்து நின்றவர் தமிழ் மக்கள். இவர்கள் தாங்கள் வாழ்ந்த நாட்டை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதை பழந்தமிழ் நூல்கள் எல்லாம் விரிவாகவே கூறுகின்றன. தொல்காப்பியத்திலேயே நாட்டில் நால்வகை நிலங்கள் பேசப்படுகின்றன. அந்த அந்த நில வகைகளுக்கு ஏற்ப மக்கள் பழக்கங்களும், ஒழுக்க முறைகளும் இருந்தன என்றும் அறிகிறோம். இதையெல்லாம் ஆராய்ந்தால் தொல்காப்பியர் காலமான அந்த தொல்காலத்திற்கு முன்னரேயே தமிழ் மக்கள் குறிஞ்சியிலும், முல்லை, மருதம், நெய்தல் நிலங்களிலும் குடிபுகுந்து வாழ்வு நடத்தி இருக்க வேண்டும். தமிழ் மக்களது வாழ்வு துவங்கிய இடம், மலையும் மலைசார்ந்த குறிஞ்சியுமே. பின்னர்தான் அவர்கள் படிப்படியாக, காடாகிய முல்லையில் இறங்கி, வயலாகிய மருதத்தில் தவழ்ந்து, நெய்தலாகிய கடற்கரை வரை சென்றிருக்க வேண்டும். ஆதலால் இறைவழிபாடு முதல் மலைநாடாகிய குறிஞ்சியிலே தோன்றியதில் வியப்பில்லை: நீண்டுயர்ந்த மலையிலே பிறந்த இறை வழிபாடு அகன்று பரந்த கடற்கரைக்கே நடந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாகத்தான் காடாகிய முல்லையிலும், வயலாகிய மருதத்திலும் பரவி இருக்கிறது. இந்நாடுகளிடையே எழுந்த பல பல குன்றுகளிலும் சில சில சோலைகளிலும் புகுந்திருக்கிறது.

இந்த உண்மையை எல்லாம் அறிந்த நக்கீரர் இறைவழிபாட்டை மலையான திருப்பரங்குன்றத்திலே துவங்கி, கடற்கரையாம் திருச்செந்தூரிலே நடத்தி, காடாகிய ஆவினன்குடியிலும், வயல்வெளியாகிய ஏரகத்திலும், சோலையாகிய பழமுதிர் சோலையிலும் பரவவிட்டிருக்கிறார். பின்னும் நாட்டின் பல பகுதிகளில் உயர்ந்துள்ள குன்றுகளிலும், இறைவழிபாடு ஏறி நின்றதையும் சொல்ல மறக்கவில்லை. இப்படி நாட்டில் இறைவழிபாடு நடந்த இடமெல்லாம் நம்மை ஆற்றுப்படுத்தி அங்கெல்லாம் இறைமையைக் காண வகை செய்திருக்கிறார் அவர்.

நக்கீரர் கண்ட இறைவன் முழுக்க முழுக்க முருகனே. நமக்குத்தான் தெரியுமே சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்த நக்கீரரைப் பற்றி. மதுரையிலே இறைவனாம் சோமசுந்தரனே, தருமிக்குப் பொற்கிழி அளிக்க விரும்பி ஒரு பாட்டுப்பாட அந்தப் பாட்டு குற்றம் உடையது என்று சொன்னவர் ஆயிற்றே அத்துடன் நிறுத்தினாரா?