பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளையும் கூறிவிட்டு இவற்றிற்குமேல் சரம் - நீர் வணம் = வசிப்பவன், அதாவது நீரில் வசிப்பவன். அதாவது பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணன் என்றார்கள். சரவணபவன் நாராயணனாகி விட்டானே! ஆம்! நாராயணன் தான். இவர்கள் சொல்லவில்லை. திருச்செந்தூர்ப் புராணம் சொல்கிறது. இப்படிச் சமரசம் கண்டு மால்மருகன், மருகனே மால் என்று காட்டுகின்றார். அருணகிரிநாதர், "அகரமு மாகி அதிபனு மாகி அதிகமு மாகி - அகமாகி, அயனென வாகி அரியென வாகி அரனென வாகி - அவர் மேலாய்” என்று பாடி மும்மூர்த்தியும் முருகமூர்த்தி என்றுதானே கூறுகின்றார்?

குழந்தையாய் இருந்தால் கொஞ்சலாம். குழந்தை வேலன் நமக்கு உதவமாட்டானே. இப்படிக் கோபிக்கிறாராம் படிக்காசுப் புலவர். இன்னமும் சின்னவன் தானா? படித்துச் சுவையுங்கள். ஆசிரியர் திருச்செந்தில் பற்றித் தனி ஆய்வே நடத்துகிறார். புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், தேவாரம், முதில் இலக்கியங்கள் மூலம் தலத்தின் தொன்மையை விளக்குகின்றார். திருக்கோயில் கட்டிய வரலாறு, பூசை, விரதம், விழாக்கள் எல்லாம் இதில் வகுத்துக் கூறுகின்றார். சூரசம்மாரத்தில் சம்மாரம் மட்டுமல்லாமல் சூரகாரியான மருகன் பொற்சிலையாக உள்ளான் என்று டச்சுக்காரர் திருடிச் சென்றதையும் வடமலையப்பன் என்றும் அடியார் கடலில் இருந்து மீட்டுவந்த வரலாற்றுச் செய்தியையும் சுவையடக் கூறுகின்றார்கள்.

பழநிமலையில், முருகன் கோவணாண்டியாக நிற்கின்றான். அவன் ஞானப்பழம், "அவன் துறவியானது நம்மை எல்லாம் துறவியாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக, அருளுடையவர்களாக, மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக் கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்குப் பற்று துறவு என்றெல்லாம் உண்டா?" என அற்புத விளக்கம் அளிக்கின்றார்கள்.

வடநாட்டில் சுப்பிரமணியன் கட்டை பிரமசாரியாம். ஏன் அப்படி? “தமிழ் நாட்டுக் குறமகள் நம்பிராஜன் புத்திரி வள்ளியைக் கண்டு சொக்கி மரமாக நின்ற முருகன் வேறு எந்த நாட்டுப் பெண்ணையும் அதிலும் மராத்தியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்க விரும்புவானா என்ன?" என்ன நகைச்சுவை பாருங்கள்.

கோலக்குமரன் அழகே ஆசிரியர் சிந்தையைக் கவர்ந்த தென்பதால் மிக அற்புதமாக அழகை வருணிக்கின்றார். அந்த அழகில் நாம்