மனித சமுதாய வரலாற்றின் படி பார்த்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நாகரிகம் பல படிகளைக் கடந்த பின்னரே வந்திருக்கிறது. இது ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒரே நிலையில் கற்பு வளையமாக மாறிவிட்ட நெறியில் நின்றிருக்கிறது. ஆனால், தாய்மை என்ற மேலாம் ஆற்றல், வெறும் போகத்துக்கு இழிந்தபின், அதற்காகவே ஒரு வருக்கத்தைச் சமுதாயம் நியாயப்படுத்தி வந்திருக்கிறது. கற்பு நெறி ஒரு பெண்ணின் ஆளுமையில் எவ்வாறு பதிந்து அவளை முடக்கி விடுகிறதோ, அதேபோல், ஒரு பெண் தன் உடலினால் மட்டுமே பிழைக்கும் மரபில் வந்திருப்பதாகவும், அதற்குரிய நெறிகளில் ஒழுகுவதே தருமம் என்றும் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இப்படி விலைமகளிருக்கான வாழ்வின் தோற்றுவாய், அன்றைய புராணங்களில் இருந்து இன்றைய பாலியல் வன்முறை அநீதிகள் வரையிலும் ஒரேவிதமாக நியாயப் படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு பெண், கற்பு நெறியிலிருந்து வழுவி விட்டால், பிறகு அவள் உடல், பொதுவான போகத்துக்கு உரியதாகிறது என்பதே நீதி.
மகாபாரதம் ஆதி பருவத்தில் வரும் ஒரு வரலாற்றைப் பார்ப்போம். தீர்க்கதமஸ் என்ற ஒரு ரிஷி-கண்ணற்றவர்- இவர் தம் மனைவியுடன் இன்பம் துய்ப்பதில் எந்த ஒரு வரன் முறையும் பாலிக்காதவராக இருந்தார். மற்ற முனிவர்களுக்கும், இது தூண்டுதலளிக்கக் கூடியதாக இருந்தது. தீர்க்கதமஸின் மனைவி வெறுப்படைந்தாள். அவரை விட்டகல முயன்றாள். அப்போது அவர் ஒரு விதி செய்தார்.
“இன்றிலிருந்து ஒரு பெண்ணுக்கு, கணவனாகிய ஒரே ஆண்தான் எல்லாமும். அவன் உயிருடன் இருந்தாலும்,