176
இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை
எழுதினாள். மக்களின் மனங்களில் ஜனதா கட்சியினர் மீது தோன்றியிருந்த நன்மதிப்பைக் கரைக்கக்கூடிய அனைத்துச் சாகசங்களையும் மேற்கொண்டாள்.
மொரார்ஜி பதவியிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று. சரண்சிங் பிரதமரானார். அந்தக் கூட்டணி அரசும் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்தது.
1980இல் மீண்டும் பொதுத்தேர்தல் வந்தபோது, மக்கள் நேரு குடும்பம்தான் இந்த நாட்டை ஆளத்தகுதி பெற்றது என்று தோசையைத் திருப்பிவிட்டார்கள்! சஞ்சயும் மனேகாவும் இந்தச் சந்தர்ப்பத்தை முழு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு செய்த தீவிரப் பிரசாரத்தின் பயன் இந்த விளைவு.
“காங்கிரசை, இந்திரா நேரு காந்தியை, விலக்கி வேறு அரசு கொண்டு வந்தீர்களே, என்ன ஆயிற்று? இந்த நாட்டின் முடி சூடா ராணியும் அவர்தாம்” என்று வெற்றியைக் குவித்து விட்டார்கள்.
524க்கு 351 என்று காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று, சஞ்சயின் ஆணவத்தை இன்னமும் ஊக்கிவிட்டது.
இந்திராவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள், விசாரணைக் குழுக்கள், எல்லாம் கலைக்கப் பட்டன. சஞ்சய் முந்தைய நாட்களைக் காட்டிலும் சுவாதீனமாக உரிமைகளைக் கைக்கொண்டு, துணைப் பிரதமர் என்று மக்கள் குறிப்பிடுமளவுக்கு உரம் பெற்றான். இவனுக்கென்று ஒரு புகழ்பாடும் குழுவே இயங்கியது. இவன் நடவடிக்கைகள் இந்திராவின் உள் மனசைக் கலக்கும் வண்ணம் இருந்தன.
மூத்த தலைவர்கள் ஒடுக்கப்பட்டனர்; தருமம் சார்ந்த மரபுகள் பற்றிய வாய்ப் பேச்சும் கூட வழக்கொழிந்ததாயிற்று.