திருவாசகம்/திருப்புலம்பல்

விக்கிமூலம் இலிருந்து
திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு
(திருவாரூரில் அருளியது - கொச்சகக் கலிப்பா)


பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. 556

சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. 557

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 558

திருச்சிற்றம்பலம்