என்.வி. கலைமணி
43
சாவர்கரைப் போல ஐயரும் இந்தியாவை வெள்ளையரிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று சிந்தித்தார். ஆனால் ஒன்று. இந்தச் சிந்தனைகளுக்கு இடையே சட்டக் கல்லூரிப் படிப்பை மட்டும் அவர் மறக்கவில்லை. தொடர்ந்து படித்துக் கொண்டே வந்தார். ஆனால், படித்த நேரம்போக, மீதிநேரமெல்லாம் நாட்டு விடுதலை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கிக் கிடந்தார்!
இலண்டனிலே இரகசியமாக நடைபெற்று வந்த அபிநவபாரத் சங்கத்திலே ஐயர் உறுப்பினரானார். புரட்சிகரமான திட்டங்கள் இவர் சிந்தனையிலே சுரந்தன. இந்தச் சிந்தனைக் குழப்பங்களுக்கு இடையே தனது மைத்துனர் பசுபதி வைத்துக் கொடுத்த உண்டியல் கடையை மூடலானார். பாவம்!! உண்டியல் கடையை மட்டுமா மறந்தார். ரங்கூன் நகரிலே உள்ள தனது அருமை மனைவியையும் மகளையும் கூட அடியோடு மறந்தே போனார் மனைவி மக்களை மட்டுமா மறந்தார்? லண்டன் வருவதற்கு யார் காரணக்கர்த்தாவாக இருந்தாரோ, அந்த மைத்துனர் பசுபதியையும் ஐயர் மறந்தார்!
வ.வே.சு.ஐயர் இப்போது சுதந்திரப் பைத்தியமானார்! வரம்புக்கு மீறிய ஓர் உண்ர்வில் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை மறப்பது இயல்புதானே! அதனால், ஐயர் மனதில் எப்போது பார்த்தாலும், அடிமைத் தளையை அகற்றிப் பாரததேவியை வெள்ளையர்களிடம் இருந்து எப்போது விடுதலை செய்வோம் என்ற எண்ணத் துடிப்பும், தீவிரமும் அதிகமாகிக் கொண்டே இருந்தன.
சாவர்கர் என்ற மராட்டிய சிங்கத்துக்கு தமிழகத்து வீரவேங்கை யான வ.வே.சு.ஐயர், வலதுகையாகச் செயல்பட்டார். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆணிவேரை அறுத்தெறியும் சுதந்திரப் போர்ப்படைத் தளபதிகளிலே ஒருவராக வ.வே.சு. ஐயர் திகழ்ந்தார்.