சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/உள்ளப் புயல்
எதிர்பாராத நேரத்தில் வானத்திலிருந்து ஒரு மின்னல் பாய்ந்து வந்து மண்டையைப் பீறிக்கொண்டு தேகத்துக்குள் பாய்வது போன்ற உணர்ச்சி 'பயங்கொள்ளிப் பல்லவன்' என்ற சொற்களைக் கேட்டதும் சிவகாமிக்கு ஏற்பட்டது.
ஆயனரும் திடுக்கிட்டவராய், "அடிகளே! என்ன சொல்கிறீர்கள்? பயங்கொள்ளிப் பல்லவன் யார்?" என்று கேட்டார்.
"பயங்கொள்ளிப் பல்லவனைப் பற்றி உலகமெல்லாம் அறியுமே? நாடு நகரமெல்லாம் பேச்சாயிருக்கிறதே? உங்களுக்குத் தெரியாதா? ஆனால், நீங்கள் காட்டுக்குள்ளே இருக்கிறீர்கள்! உங்களுக்குத் தெரியாதுதான்!" என்றார் பிக்ஷு.
"என்ன தெரியாது? யாரைப்பற்றி உலகம் என்ன சொல்கிறது? ஒரே மர்மமாயிருக்கிறதே!" என்றார் ஆயனர்.
"ஒரு மர்மமும் இல்லை. உலகமெல்லாம் தெரிந்த விஷயத்தை உங்களுக்கு நான் சொன்னால்தான் என்ன? மாமல்லன் என்று பட்டப்பெயர் பெற்ற குமார சக்கரவர்த்தி நரசிம்ம பல்லவனைப் பற்றித்தான் சொல்கிறேன். அவன் பெரிய கோழை, பயங்கொள்ளி என்பது உலகப் பிரசித்தமாயிற்றே? முதன் முதலில் வாதாபி சைனியம் படையெடுத்து விட்டது என்று கேள்விப்பட்டதுமே மாமல்லனுக்கு உடம்பெல்லாம் நடுக்கமடைந்து மயங்கி விழுந்து விட்டானாம். அதுவும் அந்தச் சமயத்தில் அவன் அரண்மனை அந்தப்புரத்து மாதர்களுக்கு மத்தியில் இருந்தானாம். சக்கரவர்த்திக்கு மானமே போய்விட்டதாம். ஆயனரே! மாமல்லனை ஏன் சக்கரவர்த்தி யுத்த களத்துக்கு அழைத்துப் போகவில்லை என்று நீர் கேள்விப்படவில்லையா? ஏன் காஞ்சிக் கோட்டைக்கு வெளியிலே மாமல்லன் வரக்கூடாது என்று திட்டம் செய்துவிட்டு மகேந்திர பல்லவர் போர்க்களம் போனார் என்று நீர் கேள்விப்படவில்லையா?"
"ஓ பொல்லாத பிக்ஷுவே! எப்பேர்ப்பட்ட, அவதூறு சொல்கிறீர்? எம்மாதிரி அபசாரம் பேசுகிறீர்? பதினெட்டு வயதுக்குள் தென்னாட்டிலுள்ள பிரசித்த மல்லர்களையெல்லாம் வென்று 'மகா மல்லன்' என்று பட்டம் பெற்ற மகாவீரனைப் பற்றி இவ்விதம் சொல்ல உமது நாக்குக் கூசவில்லையா?" என்று ஆயனர் சற்று ஆத்திரத்துடனேயே கேட்டார்.
"மகா சிற்பியே! தங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதென்பது எனக்குத் தெரியாது. பெரிய இடத்துச் சமாச்சாரம். நமக்கு என்ன கவலை? ஆனாலும் என் வார்த்தையில் நீங்கள் அவநம்பிக்கை கொள்வதால் சொல்கிறேன், அந்த "மகாமல்லன் பட்டமெல்லாம் வெறுங்கதை! நரசிம்மவர்மனோடு போரிட்ட மல்லர்களுக்கெல்லாம் முன்னாலேயே கட்டளையிடப்பட்டிருந்தது, சீக்கிரத்தில் தோற்றுப் போய்விட வேண்டுமென்று. இப்படியெல்லாம் செய்தாலாவது பிள்ளைக்கு வீரமும் தைரியமும் வராதா என்று சக்கரவர்த்தி பார்த்தார். பாவம்! பலிக்கவில்லை! யுத்தம் என்று வந்ததும் நடுங்கிப் போய்விட்டான். சாக்ஷாத் உத்தர குமாரனுடைய அவதாரந்தானாம் நரசிம்மவர்மன். ஊர் ஊராகப் பாரத மண்டபம் கட்டிப் பாரதம் படிக்க வேண்டுமென்று சக்கரவர்த்தி ஏற்பாடு செய்திருக்கிறாரே, எதற்காகத் தெரியுமா? முக்கியமாக, அவருடைய திருக்குமாரனை உத்தேசித்துத்தான்!..."
"அடிகளே! நிறுத்துங்கள்! குமார சக்கரவர்த்தியைப் பற்றி இப்படியெல்லாம் கேட்க என் மனம் சகிக்கவில்லை" என்றார் ஆயனர்.
"இன்னும் மிச்சமுள்ள உண்மையையும் கேட்டால் என்ன சொல்வீர்களோ, தெரியவில்லை, ஆனால் தங்கள் குமாரி சிவகாமி இருக்கும்போது சொல்லக் கூடாது...." என்று கூறி நாகநந்தி சிவகாமி இருந்த இடத்தை நோக்கினார்.
சிவகாமி ஏழெட்டு வயதுச் சிறுமியாயிருந்தபோது ஒரு சமயம் ஒரு தேன் கூட்டில் கையை வைத்துவிட்டாள். கையிலும் உடம்பிலும் தேனீக்கள் கொட்டிவிட்டன. ஒரு நாளெல்லாம் வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு வேதனையை நாகநந்தி நரசிம்மவர்மரைப் பற்றிச் சொல்லி வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தபோது சிவகாமி அனுபவித்துக் கொண்டிருந்தாள். பிக்ஷுவின் வார்த்தை ஒவ்வொன்றும் பழுக்கக் காய்ச்சிய ஈயத்துளியைப்போல் அவள் காதில் விழுந்து கொண்டேயிருந்தது.
பிக்ஷு, "உங்கள் குமாரி இருக்கும்போது சொல்லக்கூடாத விஷயங்கள்" என்று கூறியதும், இதுதான் சமயம் என்று சிவகாமி சட்டென்று எழுந்திருந்தாள். அவர்கள் பக்கமே பாராமல் நடந்து வீட்டின் இரண்டாங்கட்டுக்குள் பிரவேசித்தாள். சிவகாமியின் செம்பஞ்சு ஊட்டிய பாதங்களைக் கதவின் அடியில் இருந்த இடைவெளியில் புத்த பிக்ஷு பார்த்துவிட்டு, கொஞ்சம் உரத்த குரலில் சொன்னார்.
"ஆயனரே! உமது குமாரி சிறந்த கலைவாணி மட்டுமல்ல; ரொம்பவும் இங்கிதம் தெரிந்தவள் எப்படிச் சட்டென்று எழுந்து போனாள் பாரும்!... நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், சக்கரவர்த்திக்குத் தம் புத்திரன் விஷயத்தில் இன்னொரு பெரிய கவலையாம். பல்லவ குலத்தில் இவ்வளவு இளம் வயதில் இவனைப் போல் ஸ்திரீலோலன் ஆனவனே கிடையாதாம். ஒரு சமயம் மாமல்ல பல்லவன் ஒரு பெண்ணுக்கு எழுதிய காமவிகாரம் ததும்பிய ஓலை சக்கரவர்த்தியிடம் அகப்பட்டு விட்டதாம். இதையெல்லாம் உத்தேசித்துத்தான், மாமல்லனைக் காஞ்சியிலேயே இருக்கவேண்டுமென்று சக்கரவர்த்தி திட்டம் செய்திருக்கிறாராம்!..." இப்படி நாகநந்தி சொல்லிக் கொண்டிருந்தபோது, கதவின் அடியில் தெரிந்த பாதங்கள் மறைந்தன. நாகநந்தியும் பிறகு தமது குரலைத் தாழ்த்திக்கொண்டு பேசலானார்.
ஆயிரம் பேய்களினால் துரத்தப்பட்டவளைப் போல் சிவகாமி வீட்டின் பின்கட்டுகளைத் தாண்டிக் கொல்லைப் பக்கம் ஓடினாள். காட்டுக்குள்ளே எங்கே போகிறோம் என்ற உத்தேசமில்லாமல் ஓடினாள். ஓடி ஓடிக் களைத்துக் கடைசியில் ஒரு மரத்தடியில் வேரின் மீது உட்கார்ந்தாள்.
சிவகாமியைப் பின் தொடர்ந்து மானும் கிளியும் பின்னால் வந்து கொண்டிருந்தன. அவற்றை அவள் கவனிக்கவேயில்லை. மரத்தடியில் உட்கார்ந்த சிறிது நேரத்துக்குப் பிறகு ரதி அருகில் வந்து மெதுவாகத் தன் முகத்தை அவள் கரத்தின்மீது வைத்தது. சிவகாமி அதை ஒரு தள்ளுத் தள்ளி, "சீ தரித்திரமே! பீடை! ஒழிந்துபோ!" என்று கத்தினாள்.
சந்தர்ப்பம் தெரியாத அசட்டுச் சுகரிஷி, 'மாமல்லா! மாமல்லா!' என்றது. சிவகாமி கையை ஓங்கி, 'சனியனே! மூதேவி!' என்று அதை அடிக்கப் போனாள். கிளி இறகுகளை அடித்துக் கொண்டு அவளிடம் அகப்படாமல் தப்பிச் சென்றது.
திடீரென்று தாமரைக் குளக்கரையில் மகிழமரப் பொந்தில் இருந்த ஓலைகளின் நினைவு வந்தது. அந்த ஓலைகளை உடனே எடுத்து நெருப்பிலே போட்டு எரித்துச் சாம்பலாக்கிவிட வேண்டுமென்று நினைத்துத் தாமரைக் குளத்தை நோக்கி ஓடினாள். அதி சீக்கிரத்தில் குளக்கரையை அடைந்து, உட்காரும் பலகையின் மீது காலை வைத்து ஏறி மரப்பொந்திலே கையை விட்டாள்.
ஐயோ! அந்தப் பொந்திலே ஏதாவது நாகசர்ப்பம் இருந்து அவள் கரத்தைத் தீண்டிவிட்டதா என்ன? அவள் முகத்திலே ஏன் அவ்வளவு பயங்கரம்? கையை ஏன் அவ்வளவு அவசரமாய் வெளியில் எடுத்தாள்? இன்னும் கொஞ்சம் மேலே கிளம்பிப் பொந்திற்குள்ளே உற்றுப் பார்க்கிறாளே, ஏன்? அந்தப் பொந்து வெறுமையாய், சூனியமாயிருந்ததுதான் காரணம். காலையில் அந்தப் பொந்தில் இருந்த ஓலைகள் எங்கே போயிருக்கும்?
சிவகாமி அந்த மகிழ மரத்தை ஓடி அடைந்த அதே சமயத்தில் தாமரைக் குளத்தின் எதிர்க்கரையில் இருந்த காட்டில் புத்த பிக்ஷு விரைந்து வந்து கொண்டிருந்தார். மரப் பொந்தில் அவள் கையை விட்டு வெறுங்கையை வெளியில் எடுத்ததை அவர் பார்த்தார். அப்போது சிவகாமியின் முகத்தில் தோன்றிய வியப்பும், பயமும், பிக்ஷுவுக்கும் எல்லையற்ற ஆச்சரியத்தை உண்டாக்கிற்று என்பது அவருடைய முகக்குறியினால் தெரிய வந்தது.