ஆறுமுகமான பொருள்
23
இப்படி எல்லாம் தாயொடு விளையாடும் இந்த வயதில் பக்தர்கள் துயரை எல்லாம் அவன் அறிதல் சாத்தியமா? இல்லை. நாமே சென்று சொன்னாலும் அதைத் துடைக்கும். ஆற்றல்தான் இருக்குமா அவனுக்கு? பிள்ளை கொஞ்சம் வளரட்டும், நல்ல இருபது வயதுக் காளையாய் இடர்துடைக்கும் நாயகனாக மாறட்டும். அப்போது நம் குறைகளைச் சொல்லிக் கொள்ளலாம். அப்போதுதானே அவனுக்கும் நம் துயர் துடைப்பது எளிதாக இருக்கும் என்றெல்லாம் எண்ணி எண்ணி, முருகனிடம் விண்ணப்பம் செய்வதை ஒத்திப் போட்டுக் கொண்டே வருகிறான், பக்தன் பல வருஷங்களாக.
ஆனால், ஒரு நாள் பக்தனுடைய நண்பர் ஒருவர், அவனை கூட்டிச் செல்கிறார் தன்னுடன், ஆறுபடை வீடுகளில் அழகான படைவீடாகிய திருச்சீர் அலைவாய்க்கே கூட்டி வந்து விடுகிறார் நண்பர். அங்கே முருகன் கோயில் கொண்டிருக்கிறான் என்பதெல்லாம் பக்தன் அறிந்தவன் தான். ஆகவே நண்பருடன் கடற்கரையிலே உள்ள அந்த வேலவன் கோயிலுக்கே செல்கிறான். அலை வந்து மோதும் அந்தக் கோயிலின் தெற்கு வாயில் வழியாக சண்முக விலாசத்தைக் கடந்து கோயிலுக்குள் நுழைகின்றான். அத்தனை நேரமும், கூனிக் குறுகி குனிந்து நடந்த பக்தன் நிமிர்ந்து நோக்குகிறான். அப்போது அவனுக்குக் காட்சி கொடுக்கிறான் சண்முகன். அன்று அங்கே அவனைத் தடுத்து ஆட்கொள்ள நிற்பவன் பாலனும் அல்ல, பால சந்நியாசியும் அல்ல. ஓராறு முகங்களும் ஈராறு கரங்களும் கொண்ட சண்முகநாதனே வேலேந்திய கையுடன் வீறுடன் நிற்கிறான் அங்கே.
வேல் கொண்ட கையும்,
விறல் கொண்ட தோளும்,
விலங்கு மயில்
மேல் கொண்ட வீறு
மலர் முகம் ஆறும்,
விரைக்கமலக்
கால் கொண்ட வீரக்
கழலையும் காண்கிறான்