உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

63



வெஸ்டன் என்ற இடத்திலே உள்ள பள்ளிக்குக் கல்வி கற்றிட ஆஸ்லர் அனுப்பப்பட்டான். அந்தப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரைவிட விடுதிக் காவலனிடம் அன்பு கொண்டிருந் தார்கள். விடுதிக் காப்பாளரான ரெவரெண்ட் டபிள்யூ. ஏ. ஜான்சனும் மாணவர்களிடம் மிகுந்த அன்புடையவராக இருந்தார்.

ஜான்சனும் அவரது நண்பருமான ஜான் பவலும் நெருங்கிய நண்பர்கள். டோரொண்டாவில் உள்ள கல்லூரியில் பவல் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். நண்பர்கள் இருவரும் தொலைநோக்கிக் கண்ணாடி மூலமாக தோட்டத்தின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுக் களிப்பார்கள்.

ஆஸ்லர் செய்த குறும்புகளை அந்த நண்பர்கள் கண்டு இரசிப்பார்கள். அதனால், ஆஸ்லருக்கும் அவர்கள் நண்பர்கள் ஆனார்கள். ஆராய்ச்சிக்காக பவலும் - ஜான்சனும் வெளியே செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆஸ்லரையும் அவர்கள் அழைத்துச் செல்வார்கள்.

எனவே, ஆஸ்லர் பள்ளி வாழ்க்கை இங்கே சற்று அமைதியாகவே காணப்பட்டது. தனது குறும்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அவன் குறைத்துக் கொண்டே வந்தான். ஆஸ்லர் கல்லூரி வாழ்க்கையில் ஏதோ ஒரு மாறுதலும் ஏற்பட்டது.

ஆஸ்லர் நுண்ணறிவினைப் பவல் பாராட்டுவதோடு இராமல், தான் செய்யும் ஆராய்ச்சிகளையும் ஆஸ்லரை விட்டே செய்யச் செய்வார். இவரும் அந்த ஆராய்ச்சி வேலைகளைப் பொறுப்புடன் செய்து வந்தார்.

அறிவுள்ள பையன்கள்தான் எப்போதும் குறும்பர்களாக இருப்பார்கள். அன்பினால் அவர்களைத் திருத்திவிட முடியும் என்பதற்கு அடையாளமாக ஆஸ்லரிடம் அந்த இரு நண்பர்கள் பழகி வந்தார்கள். உளநூல் விதியும் இதுதானே! அதற்கு எடுத்துக் காட்டானான் ஆஸ்லர்.

ஜான்சன், பவல் நட்பால் ஆஸ்லர் ஓர் உயர்ந்த மனிதனாக எதிர்காலத்தில் திகழ்வான் என்பதற்குச் சான்றானான் ஆஸ்லர்.