புலவர் என்.வி. கலைமணி
145
வட்டாரம் தான் அந்த மதுபான வகைத் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்றது.
‘லீல்’ நகரில் ஓர் அறிவியல் கழகம் இயங்கி வந்தது. அக் கல்விக் கழகத்தில் ஒரு தலைவர் இடம் காலியாக இருந்தது. அதற்கு யாரை நியமிக்கலாம் என்று அரசு யோசனை செய்தபோது, இறுதியாக லூயி பாஸ்டியர்தான் தகுதி பெற்றவரென்று தீர்மானித்து, அவரை நியமித்தது.
லூயி பாஸ்டியர், லீல் நகரம் சென்று அக் கல்விக் கழகத்தின் தலைவர் பதவியை ஏற்றார். பதவியை அவர் ஏற்றுக் கொண்ட பின்பு, அறிவியல் வளர்ச்சியும், அதன் பயன்களும் பற்றி ஒரு சொற்பொழிவை அந்த விஞ்ஞான அரங்கத்திலே ஆற்றினார்: அங்கே கூடியிருந்த முதிர்ச்சியாளர்களான விஞ்ஞானிகள் எல்லாம், லூயி உரையை வரவேற்றுப் பாராட்டினார்கள்.
ஒயின், பீர் உற்பத்தி தொழிற்சாலைகளோடு, வேறு வகையான தொழிற்சாலைகளும் நிறைந்த இடம் லீல் நகரம். அதனால், அங்கே எப்போதும் வேலை வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.
லீல் நகரில் விஞ்ஞானக் கல்வியும் நன்றாக வளர்ந்திருந்தது. அதற்குரிய ஒரு சிகரமாய் லூயி பாஸ்டியர் தலைமையால் உருவான உரையரங்குகளும், சோதனைக் கூடங்களும் அமைந்தன. பாஸ்டியர் நடத்தும் விஞ்ஞான வகுப்புகளும் ஒரு தூண்டுகோலாகவே திகழ்ந்தன.
லூயி பாஸ்டியரின் வகுப்பில் நடைபெறும் தெளிவான விளக்கங்கள், மெதுவான சோதனை முறைகள், அவர் போதிக்கும் அறிவியல் முறைகள் ஆகியன எல்லாமே அங்குள்ள மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
இதனால் பாஸ்டியர் புகழ், லீல் நகர வட்டாரத்தில் பெரிதும் பரவியது. அவரைப் பொறுத்தவரையில் நல்ல பெயரோடு அவர் வாழ்ந்து வந்தார். புதுப் புது மாணவர்கள் அக் கழகத்தில் சேர்ந்து பயன் பெற்றார்கள்.