புலவர் என்.வி. கலைமணி
115
இந்த மதிப்பெண்களையும் அவர் இரவும் - பகலும் அரும்பாடுபட்டே படித்துப் பெற்று வந்தார். பரிசுகள் சில பெற்றார். என்றாலும், அவர் எதையும் மெதுவாகவே புரிந்து கொள்ளும் சுபாவமுடையவராகவே இருந்தார்.
ஆனால், பாஸ்டியரிடம் இருந்த சிறப்பு என்னவென்றால், ஒரு பாடத்தைக் குற்றமறப் படித்து, நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே, அடுத்தப் பாடத்தைக் அவர் படிக்க ஆரம்பிப்பார். அதற்காக இது புரியாத பாடம், என்று எதையும் ஒதுக்கி வைத்து விடும் குணம் அவரிடம் எப்போதுமில்லை.
தனக்குப் பாடம் போதிக்கும் ஆசான்களிடம், எந்தப் பாடம் புரியவில்லையோ, அதைத் திருப்பித் திருப்பிக் கேட்டு, உரிய விடைகளைப் பெற்றுத் தெரிந்து கொண்ட பிறகே - மறுபாடம் படிக்க முயற்சிப்பார். எதையும் அவசரம் அவசரமாகப் படித்துக் கொள்ள மனமில்லாதவர் மிகச் சிறந்த பொறுமைசாலி எனலாம் பாஸ்டியரின் கல்வித் தரத்தை!
ஜோசப் பாஸ்டியர் மாவீரன் நெப்போலியனிடம் போர் பயிற்சி பெற்றவரல்லரா? அதற்கேற்ப பாஸ்டியர் தனது மகனை காலை, மாலை இரு வேளைகளிலும் அழைத்து, தம்மருகே உட்கார வைத்து, மாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள், கல்வி முறைகள், மனிதாபி மானங்கள், விடாமுயற்சிகள், சுறுசுறுப்பான பணிகள் ஆக்க நோக்கங்கள், ஃபிரான்ஸ் நாட்டின்மீது அவருக்கிருந்த நாட்டாபிமானம், தாய் தந்தையர் மீது அவர் வைத்திருந்த பெற்றோர் பாசம் ஆகியவற்றை எல்லாம் ஒவ்வொரு சம்பவங்களாக எளிய முறையிலே, மகன் புரிந்து கொள்ளும் உணர்வுகளோடு விளக்கிக் கூறிக் கூறி, தனது மகன் லூயி பாஸ்டியரையும் நெப்போலியனுடைய நகல் போலாக்கினார்.
கல்வியில் பெற்றோர் கவனிப்பு தேவை என்று இப்போதல்லவா நாம் பேசுகிறோம்? இந்தப் பணியை மிகச் சிறந்த முறையில் தனது மகனிடம் அன்றே செய்து கண்காணித்து வந்தவர் ஜோசப் பாஸ்டியர்!