பெருங்கதை/1 56 வென்றி எய்தியது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

1 56 வென்றி எய்தியது

வேடர் எண்ணுதல்[தொகு]

தெரிவுறு சூழ்ச்சியர் செய்வதை யறியார்
ஒருவ னாம்பல ரொழிவ மென் னாது
விசையுடை வெங்கணை விற்றொழி னவின்ற
அசைவி லாள னழிக்கவும் பட்டனம்
உரைமி னொல்லென வுறுவது நோக்கிக் 5

நிமித்திகன் கூற்று[தொகு]

கருவினை நுனித்த வருவினை யாண்மைப்
புள்ளுணர் முதுமகன் றெள்ளிதிற் றேறி
இளையவர் கேட்க விற்றென விசைக்கும்
கிளையுடைப் பூசலோடு முளையரில் பிணங்கிய
முள்ளரை யிலவத் துள்ளவ ரிருப்பக் 10
கேளிழுக் கறியாத் தாளிழுக் குறீஇயினிர்
கோளிமிழ் கனலி சூழ்திசைப் பொத்திப்
புகையழ லுறீஇப் பறப்படுத் தவர்களை
நவையுறு நடுக்கஞ் செய்த லுணரீர்
கள்ள மின்றிக் கட்டாள் வீழ்த்த 15
வெள்ளை வேட்டுவீர் புள்ளெவன் பிழைத்ததென்
றுள்ளழிந் தவர்கட் குறுதி கூறக்

வேடர் தீ மூட்டல்[தொகு]

கணையொடு பிடித்த கைக்கோ லரணிப்
புடையிடு பூளைப் பூப்புற மடுத்துப்
பிசைந்த சிறுதீப் பெருக மூட்டி 20
இசைந்த முளரி ணெண்டிசைப் பக்கமும்
வேனற் பேரழல் கானவர் கொளுத்தி
நோவக் கூறிச் சாவ தல்லது
போதல் பொய்க்கு மினியெனப் போகார்
அரிமா வளைந்த நரிமாப் போல 25
இதன்முனை வேட்டுவ ரிடுக்கண் செய்யப்

வாசவதத்தை ஏங்கல்[தொகு]

புகைமிகு வெவ்வழல் பூம்பொழில் புதைப்பக்
கான வெந்தீக் கடும்புகைப் பட்ட
மானமர் பிணையின் மம்ம ரெய்தித்
தளையவிழ் தாரோன் றனிமைக் கிரங்கிக் 30
களைகண் காணாது கையறு துயரமொடு
பெய்வளைத் தோளி வெய்துயிர்த் தேங்கக்

உதயணன் செயல்[தொகு]

குலங்கெழு குருசில் கொடிக்கைம் மாறி
அலங்கிதழ்க் கோதையொ டவிழ்முடி திருத்திக்
கலங்க லோம்பிக் காஞ்சன மாலாய் 35
இலங்கிழை மாதரை யென்வழிப் படாதோர்
பக்கங் கொண்டு படர்மதி யிப்பால்
வில்லி னீக்கி வெள்ளிடை செய்தவர்
அல்ல லுறீஇ யாருயி ருண்கெனக்
கழைவளர் கானங் கடுந்தீ மண்ட 40
முழைவயிற் போதரு முளையெயிர் றிடிக்குரற்
புலவும் புலிபோற் பொங்கழல் புதைஇய
இலவஞ் சோலையி னிறைமகன் போதா
ஆளி கண்ட வானை யினம்போல்
வாளி வல்வில் வயவர் நீங்கச் 45
சில்லிருங் கூந்தலை மெல்லென நடாஅய்
வெல்போர் விடலை வெள்ளிடைப் படுத்தலின்

வேடர் செயல்[தொகு]

அரணிடை யகற்றி யச்ச நீங்கி
முரணுடை வேட்டுவர் மூழ்த்தனர் மூசி
முன்னும் பின்னும் பக்கமு நெருக்கிப் 50
பொன்னணி மார்பன் போர்த்தொழி லடங்கக்
கலையுணர் வித்தகர் கைபுனைந் தியற்றிய
சிலைநா ணறுத்தலிற் செய்வதை யின்றி

உதயணன் நிலை[தொகு]

வலைநா ணிமிழ்ப்புண் வயமாப் போலக்
காட்சிக் கின்னா வாற்றல னாகிப் 55
பேரமர் ஞாட்பினுட் பெருமுது தந்தைதன்
வார்சிலைப் புரிநாண் வாளியி னறுப்பத்
தேர்மிசைத் திரிந்த நிறலோன் போல
வீழ்தரு கடுங்கணை வில்லின் விலக்கி
ஊழ்வினை துரப்ப வுயிர்மேற் செல்லாது 60
தாழ்தரு தடக்கையுந் தாளுந் தழீஇ
வாயறை போகிய வடுச்சேர் யாக்கையன்
ஆழி நோன்றா ளண்ணலைக் கண்டே

வாசவதத்தையின் செயல்[தொகு]

தாழிருங் கூந்தற் றளரிய னடுங்கித்
தானணி பெருங்கலந் தன்வயிற் களைந்து 65
கான வேட்டுவர் கைவயிற் கொடுவெனக்
கவரிதழ்ச் செவ்வாய்க் காஞ்சன மாலைகை
அவிரிழை நன்கல மறைவர நீட்டி
அழியன்மீ னீரென வழுவனண் மிழற்றிய
காஞ்சனை நமைப்பொரு கானவர் தமக்குக் 70
கொடுத்தில மாயிற் கொடுமைவிளை வுண்டெனக்
கலக்க வுள்ளமொடு கடுஞ்சிலை கைத்தர

உதயணன் செயல்[தொகு]

நலத்தகு மாதர் நடுக்க நோக்கி
வலத்த னாகிய வத்தவ னகப்பட்
டின்னுயிர் போகினு மின்ன னென்னாது 75
மன்னுயிர் காவன் மனத்தி னெண்ணிக்
குன்றச் சாரற் குறும்பினு ளுறையும்
வன்றோ ளிளையீர் வந்துநீர் கேண்மின்
பெருங்கலம் பெய்தியாம் பிடியொடும் போந்த
அருங்கல வாணிக ரப்பிடி வீழ 80
வருத்த மெல்லா மொருப்படுத் தொருவழி
நெறிவயி னீக்கிக் குறிவயிற் புதைத்தனெம்
கொள்குவி ராயிற் கொலைத்தொழி னீங்குமின்
உள்வழி யப்பொருள் காட்டுக முய்த்தெனச்

வேடர் தலைவன் உதயணனை வினவுதல்[தொகு]

சொற்பொருள் கேட்டே விற்றொடை மடக்கி
அறவரை யிழந்த செறுநரை விலக்கிக்
குறவருட் டலைவன் குருசிலைக் குறுகி
யாரே நீரெமக் கூறியக் கூறென
வீர்ருள் வீரனை வேட்டுவன் கேட்ப

உதயணன் கூற்று[தொகு]

வத்தவர் கோமான் வாணிக ரித்திசைப்
பெரும்பெயர்க் கிளவிப் பிரச்சோ தனனாட்
டரும்பொருள் கொண்டியா மாற்றிடைப் போந்தனெம்
மடப்பிடி வீழ விடர்பட் டிருளிடைப்
பொழில்வயிற் புதைத்த தொழிலினெம் யாமென
முகைத்தார் கார்ப னுவப்பதை யுரைப்ப 95

வேடர் செயல்[தொகு]

வளங்கெழு வத்தவன் வாணிக ரெனவே
உளங்கழிந் தூர்தரு முவகைய ராகிக்
கொல்லாத் தொழிலினர் கொலைப்படை யகற்றி
வல்லாண் டோன்றலை வடகம் வாங்கிக்
கையாப் புறுத்துக் காட்டிய வெழுகென 100

உதயணன் கூற்று[தொகு]

உய்ம்மருங் குபாயத்துப் பொய்ம்மருங் கோடி
அழல்வழி வந்தியர் மனந்தனம் வதித்த
பொழில்வயிற் புதைத்தனம் புகற்கரி தாகத்
தெரிவில் கொள்கையி னெரிதலைக் கொளீஇயினிர்
அவ்வழ லாறு மாத்திர மிவ்வழி 105
நின்மி னீரென மன்ன குமரன்
தெளியக் கூறப் புளிஞர் தேறி

வேடர் கூற்று[தொகு]

எவ்வழி யாயினு மெரியவித் தவ்வழிக்
காண லுறுதுங் காட்டா யாயின்
ஆண முன்கை யடுதும் யாமென 110

வாசவதத்தை வருந்தல்[தொகு]

நன்கை யாத்தது நன்று நொந்திவன்
கவிகைக் கேலாது கட்டெனக் கலிழ்ந்தோள்
அவிரழற் கானத் தருளி லாளர்
அடுது மெனவோ யமர்ப்பிணை போலத்
தீயுறு தளிரின் மாநிற மழுங்க 115
மாழை யொண்க ணூமூழ் மல்க
மம்ம ருள்ளமொடு மடத்தகை மாழ்க

காஞ்சனை வருந்தல்[தொகு]

மாழ்கிய மாதரை வாங்குபு தழீஇக்
கனவளைப் பணைத்தோட் காஞ்சன மாலை
புனவளைத் தோளி பொழிலகங் காவனம் 120
பெருமான செலவம் பேணாய் மற்றிவ்
வரிமா னன்னோற் காருயிர் கொடீஇய
போந்தனை யோவெனத் தான்பா ராட்டி
இரங்குவது நோக்கி யிறைமகன் கூறும்

உதயணன் கூற்று[தொகு]

வருந்துத றவிரயாம் வழியிடைப் புதைத்த 125
அருங்கலப் பேரணிப் பெருங்கலங் கருதின்யாப்
புறுமுறை பின்னிடத் தறிமின் மற்றிவள்
நீப்பருந் துயர நெறிவயி னோம்பித்
தீப்புகை தீர்தலுங் காட்டுதுஞ் சென்றெனக்

வேடர் செயல்[தொகு]

கையகப் பட்டோன் பொய்யுரைத் தனனெனின் 130
உய்வகை யிலையிவ னுரைத்ததை யெல்லாம்
செய்தும் யாமென வெவ்வினை யாளர்
மையணி யானை தாங்கித் தழும்பிய
காயாப் பொழித்துக் காத்தனர் நிற்ப

உதயணன் செயல்[தொகு]

வாவிப் புள்ளின் றூவி விம்மிய 135
அணைமிசை யசைந்த வம்மென் சிறுபுறம்
மணன்மிசை யசைந்து மாக்கவின் வாட
அறியாது வருந்திய வாருயிர்த் துணைவியைப்
பொறியார் தடக்கையிற் போற்றுபு தழீஇப்
பூங்குழல் குருசி றேங்கொளத் தீண்ட 140
நீலத் தண்மலர் நீர்ப்பட் டதுபோல்
கோலக் கண்மலர் குளிர்முத் துறைப்ப
அவலங் கொள்ளு மவ்வரைக் கண்ணே

வயந்தகன் இடபகன்பாற் செல்லல்[தொகு]

கவலை யுள்ளமொடு கங்குற் போகிய
வயந்தக குமரன் வந்துகாட் டொதுங்கிக் 145
கன்றொழி கறவையிற் சென்றவ ணெய்திக்
காப்புடை மூதூர்க் கடைமுகங் குறுகி
யாப்புடை நண்பி னேற்றுப் பெயரன்
வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வரப்

இடபகன் செயல்[தொகு]

பெருநலத் தானைப் பிரச்சோ தனன்றமர் 150
இருநிலக் கிழமை யளய ரிறைவன்
வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும்
ஒன்றிய நண்பு மூகமு முயர்ச்சியும்
ஒழுக்க நுனித்த வுயர்வு மிழுக்கா
அமைச்சி னமைதியு மளியு மறனும் 155
சிறப்புழிச் சிறத்தலுஞ் சிறந்த வாற்றலும்
வெங்கோல் வெறுப்புஞ் செங்கோற் செல்வமும்
செருக்கிச் செல்லுஞ் செலவின னென்றுதம்
தருக்கிய தலைத்தாட் டானைச் செல்வப்
பெருமகற் றெளீஇத்தம் மருமதி மேம்படக் 160
கய்ந்நவி லாளனை யெஃகுள் ளடக்கிய
பொய்நிலங் காட்டின ரெனபதோர் பொய்ம்மொழி
வெந்நில மருங்கின் வேட்டுவ ரெல்லாம்
போற்றா துரைத்த மாற்றம் பட்டதை
நிலைக்கொண் டகைந்து நிரம்பாத் தந்நிலம் 165
கலக்க மறிந்த கவற்சிய னாகி
மன்னுயிர் காவலற் கம்மொழி மெய்யெனின்
இன்னுயிர் துறக்குமென் றெண்ணருஞ் சூழ்ச்சியன்
உற்றதை யுணரு மொற்றா ளிளையனை
வருகென நின்றோன் வயந்தகற் கண்டே 170
உயிர்த்துணைத் தோழ னுளனென வுவந்து
பெயர்ச்சியி லுலகம் பெற்றான் போலச்
செந்தா மரைக்கட் காவலன் செவ்வியை
முந்துறக் கேட்ட பின்றை மற்றவன்
வந்ததை யுணர்குநன் மந்திர மிருந்துழிச் 175

வயந்தகன் உதயணன் கூறியவற்றை இடபகனுக்குக் கூறுதல்[தொகு]

சிறைகொண் மன்னவன் றுறைகொள் விழவினுள்
இகழ்வொடு பட்ட வியற்கை நோக்கிப்
பவழச் செவ்வாய்ப் பாவையைத் தழீஇ
இருளிடைப் போந்தது மிரும்பிடி யிறுதியும்
இற்ற விரும்பிடிப் பக்க நீங்கலும் 180
தெருளக் கூறித் தீதில் காலத்துப்
பெருமுது தேவி யுரிமைப் பள்ளியுள்
செருமுரட் செலவன் பெருவிரல் பிடித்தவற்
கறியக் கூறிய வடையாண் கிளவியும்
செறியச் செய்த சிறப்பு மாண்மையும் 185
அருந்தொழி லந்தணன் சுருங்கச் சொல்லலும்

இடபகன் படையோடு உதயணனை நாடி வருதல்[தொகு]

விரைந்தனஞ் செல்கென வெம்படை தொகுத்து
வேழமும் புரவியும் பண்ணுக விரைந்தெனத்
தாமும் பறையொடு சங்கமணந் தியம்பக்
கடல்கிளர்ந் ததுபோற் காற்படை துவன்றி 190
அடலருங் குறும்பர்க் கறியப் போக்கி
இடபகன் படையோ டெழுந்தன னாகி
விண்ணோர் விழையுஞ் செண்ணக் கோலத்துக்
கண்ணிய செலவிற் கஞ்சிகை வையம்
கண்ணி சூட்டிக் கடைமணை பூட்டி 195
வண்ண மகளிர் கண்ணுறக் கவினிய
உழைக்கல மளந்தி யுழைப்படர்ந் தியலப்
பொற்கலத் தியன்ற நற்சுவை யடிசில்
காப்புப்பொறி யொற்றி யாப்புற வேற்றித்
தனிமை யெய்திய மன்னனுந் தையலும் 200
அணியுங் கலனு மகன் பரி யாளமும்
துணிவியல் சுற்றமுந் தொடர்ந்துடன் விட்டுப்
பின்வர வமைத்து முன்வரப் போகி

வயந்தகன் உதயணனைக் காணாமல் வருந்தல்[தொகு]

வாட்டொழில் வயந்தகன் காட்டக மருங்கின்
அண்ண லிருந்த வறிகுறித் தானம் 205
நண்ண லுற்ற காலை மன்னவன்
அம்புபட வீழ்ந்த வெங்கண் மறவர்
உதிரப் பரப்பி னுருவுகெட வுண்ட
காக்கையுங் கழுகுந் தூப்பதந் துறந்து
கோடுகொண் டிருந்த குழாஅ நோக்கிக் 210
காடுகொண் மன்னர் கதுமென நடுங்கிப்
போர்க்கள முணமை பொய்த்த லின்றென
நீர்க்கரைப் பொய்கை நெற்றிமு னிவந்த
முள்ளரை யிலவ மொள்ளெரி சூழப்
பொங்குபுகை கழுமிய பூம்பொழிற் படாஅன் 215
இங்குநம் மிறைவ னிருந்த விடமவன்
ஏதம் பட்டன னாதலி னின்னே
சாதல் பொருளெனக் காதல் கழுமி
வருபடை யுய்த்த வயந்தகன் மாழ்கப்

படையாளர் அவனைத் தேற்றல்[தொகு]

பொருபடை யாளர் புல்லிடைத் தெரிவோர் 220
வேட்டுவ ராதல் வில்லிற் காட்டி
வாட்டொழில் வயந்தகன் வருத்த மோம்பிப்
பெருங்கணஞ் சென்ற பிறங்குபுற் கானம்

படையாளர் உதயணனைக் கண்டு வேடர்களைச் சூழ்தல்[தொகு]

பரந்தனர் செல்வோர் பாவையைத் தழீஇக்
காவி கவினிய தாவில் பொய்கையுள் 225
தனித்தா ணிவந்த தாமரை போலப்
பனித்தார் மார்ப னிற்ப மொய்த்துடன்
வளைத்தனர் வலக்கும் வயவரைக் கண்டே
உளைப்பொலி மாவம் வேழமு மூர்ந்தவர்
போஒந் திசைவயிற் புதைந்தனர் நிற்பக் 230

நிமித்திகன் கூறல்[தொகு]

கதிரகத் திருந்த முதிர்குரற் பறவை
போமின் வல்லே போதீ ராயினும்
உயிர்த்தவ லுரைக்கு மென்பதை யுணர்ந்து
முந்துபுள் ளுரைத்த முதுமகன் கூற

படையாளர் செயல்[தொகு]

வெந்திறல் வேட்டுவர் விரைந்தன ராகி 235
அல்லி நறுந்தா ரண்ணலை நலிய
ஒல்லா மறவ ரொலித்தன ரோடி
வேகப் புள்ளமொடு விசைத்தன ரார்த்துக்
கோடும் வயிருங் குழுமின துவைப்பவக்
கருந்தொழி லாள ரிருந்தலை துமித்துப் 240
பெருந்தகைக் கிழவனைப் பேரா மறவரை
இடுக்கண் செய்யவு மியல்பி லாளர்
நடுக்க மெய்தக் குடைப்பெருந் தானை

உதயணன் செயல்[தொகு]

வத்தவ ரிறைவனு மெய்த்தகைத் தாகத்
தமர்மேல் வந்தமை தானகத் தடக்கி 245
நுமரோ மற்றிவர் பறிரோ தாமெனக்
கவர்கணை மொயத்த கானத் திடைமறைத்
தெம்முயிர் காமி னெனவே யாங்கவர்

வேடர் உதயணனை நோக்கிக் கூறல்[தொகு]

அடையார்க் கடந்த வுதயணன் மந்திரி
இடபக னென்போ னெறிபடை தானிது 250
கோளுலா யெழுமெனிற் கூற்றெனப் பரந்த
நாளுலாப் புறுத்தும் வாள்வலி யுடைத்தே
தெரிந்தனை நில்லா யாகி யெம்மொடு
புரிந்தனை போது போதா யாயின்
பிரிந்து காண்பீற ர்ருந்தலை துமிப்பவென் 255
றார்வ வேட்டுவ ரண்ணற் குரைத்து
வார்சிலை யம்பொடு வாங்கிக் கொள்கென

வேடர் செல்லல்[தொகு]

வீர வேந்தற்கு வீரைந்தவ ரீயா
முற்பகற் செய்வினை பிற்பக லுறுநரிற்
பார்வை நின்றும் பதுக்கையுட் கிடந்தும் 260
போர்வைப் புல்லுட் பொதிந்தன ரொளித்தும்
கழுக்குநிரை யிருந்துங் காலியற் புரவி
விழுக்குநிணம் பரிய விடுகணை விட்டும்
கோலிய வல்விற் குமரரை மாட்டியும்
வேலிய லாளரை வீழ நூறியும் 265
வெங்கணை வாளியுள் விளிந்தனர் வீழப்

உதயணன் செயல்[தொகு]

பைங்கண் வேழத்துப் படைத்திறல் வேந்தன்
தமர்வழங்கு படையு மவர்வழங்கு வாளியும்
பொன்னிழை மாதரொடு தன்வயிற் காத்து
மரம்பயி லழுவத்து மறைந்தன னிற்ப 270
உரங்கெழு மறவ ருதயண னொழிய
மத்துறு கடலிற் றத்துறு நெஞ்சினர்
பைவிரி நாகத் தைவாய்ப் பிறந்த
ஒலிப்புயிர் பெற்ற வெலிக்கணம் போல
ஒழிந்தோ ரொழியக் கழிந்தோர் காணா 275
ஆறுகொண் மாந்தர்க் கச்ச மெய்தி
ஏறுபெற் றிகந்த பின்றை வீறுபெற்
றங்கண் விசும்பிற் றிங்களைச் சூழ்ந்த
வெண்மீன் போல வென்றி யெய்திப்
பன்மாண் படைஞர் பரந்தனர் சூழ 280
மலிந்தவ ணேறி வத்தவர் பெருமகன்
கலிந்த துன்பங் கையிகந் தகலப்
பொலிந்தன னென்ப பொருபடை யிடையென்.

1 56 வென்றியெய்தியது முற்றிற்று.