உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம்

முன்னுரை

(தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்)

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் "பிள்ளையார்பட்டி பிள்ளையார்” என்னும் ஒரு சிறு நூலை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதைப் படித்துப் பார்த்த அன்பர் ஒருவர், "நான் கந்த சஷ்டி தோறும் முருகன் தோத்திரங்கள் அடங்கிய சிறு புத்தகம் ஒன்றை வெளியிட்டு வழங்குவது வழக்கம். இந்த வருஷமும் அப்படி ஒரு சிறு நூலை வெளியிட விரும்புகிறேன். தாங்களே சின்னஞ்சிறிய புத்தகமாக முருகனைப் பற்றி எழுதிக் கொடுங்களேன்" என்றார். இப்படி அவர் கேட்டு, சில நாள் கழியும் முன்னரே, மனைவி மக்களுடன் திருச்செந்தூர் சென்று பேரக் குழந்தைகளுக்காகச் செலுத்த வேண்டிய பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அங்கு இரண்டு நாட்கள் தங்கி செந்திலாண்டவனைத் தரிசிக்கும் பேறும் கிடைத்தது. “சரி. ஆண்டவனது கட்டளைதான் நண்பரது வேண்டுகோளாக வந்திருக்கிறது", என்று எண்ணினேன். திருச்செந்தூர் முருகனைப் பற்றியும், அவன் கோயில் கொண்டிருக்கும் மற்ற தலங்களைப் பற்றியுமே எழுத முனைந்தேன்.

ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழாவின் போது முருகனைப் பற்றிச் சிறு நூல் வெளியிட விரும்புகின்றனர். திரு.எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளையின் மக்கள். அவர்கள் திருநெல்வேலி சாலைக்குமரன் கோயிலில் நடத்தும் விழாவில் அந்த நூலை அன்பர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்கின்றனர். இந்த முயற்சியில் என் பங்காக சில வருஷங்களுக்கு முன், "திருச்செந்தூர் முருகன்" என்ற தலைப்பிலும், பின்னர் "மூவர் கண்ட முருகன்" என்ற தலைப்பிலும் இரண்டு சிறு நூல்கள் எழுதிக் கொடுத்தேன். இந்த வருஷம் “ஆறுமுகமான பொருள்” என்ற தலைப்பில் இச்சிறுநூலை எழுதிக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பணியை இனிவரும் கந்த சஷ்டி விழாக்களிலும் செய்து தர திருவருளை இறைஞ்சுகின்றேன். பெரியவர்களோடு பெண்களும் பிள்ளைகளும் இப்புத்தகத்தைப் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஆண்டவன் இருக்கிறான். அவன் அருளாலே அவன் தாள் வணங்குவதற்கு இத்தகைய பணி உதவும் என்று நம்புகிறேன்.

சித்ரகூடம்
திருநெல்வேலி
20.10.63