பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

அறத்தின் குரல்

நிகழ்ந்து நிறைவேறியது அந்த வழிபாடு. வழிபாடு முடிந்தபின் அந்தந்த நாட்டு மன்னர்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளையும் மரியாதைகளையும் செய்தார்கள். பெரியோர்களையும் முனிவர்களையும் வணங்கி அவர் களுடைய ஆசியைப் பெற்றார்கள் பாண்டவர்கள். தந்தை பாண்டுவின் விருப்பமாகிய இராசசூய வேள்வியை யாவரும் போற்றும்படியான முறையில் செய்து முடித்த திருப்தி அவர்கள் சிந்தையில் நிலவியது.

வேள்வி நிகழ்ந்த ஏழு நாட்களிலும் இந்திரனுடைய அமராபுரியைக் காட்டிலும் கோலாகலமும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்திரப்பிரத்த நகரம் யாவரும் விடை பெற்றுச் சென்றபின் விழா நடந்து முடிந்த இடத்தின் தனிப்பட்ட அமைதியைப் பெற்றது. வியாசர் முதலிய முனிவர்களும் கெளரவர்களும் கண்ணபிரானும் பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றபின் இந்தத் தனிமையை இன்னும் நன்றாக உணர்ந்தனர் பாண்டவர்கள். இந்திரப் பிரத்த நகரின் வாழ்வும் தருமனின் ஆட்சியும் எப்போதும் போல் அமைதியாகக் கழிந்து கொண்டிருந்தன. இராசசூய வேள்வியால் திக்குத் திகந்தமெல்லாம் பரவிய புகழ் அந்த வாழ்விற்கு ஒரு புதிய சிறப்பையும் அளித்திருந்தது.

3. கர்ணன் மூட்டிய கனல்

இந்திரப்பிரத்த நகரத்தில் நடந்த வேள்விக்குச் சென்று விட்டுத் திரும்பிய கெளரவர்களின் நெஞ்சம் பொறாமையால் குமைந்து கொண்டிருந்தது. ‘ஒரு சாதாரணமான யாகத்தைச் செய்து அதன் மூலம் எவ்வளவு பெரிய புகழைச் சுலபமாக அடைந்து விட்டார்கள் இந்தப் பாண்டவர்கள்?’ -என்று மனம் குமுறினான் துரியோதனன். மனத்தில் வெளிப்படாமல் புகைந்து கொண்டிருந்த இந்தப் பொறாமை நெருப்பைத் தீயாக வளர்த்துவிட்ட ‘பணி’ கர்ணனுடையது. தானாகவே வளர்ந்து கொண்டிருந்த