பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

383

 சேர்ந்து வளைத்துக் கொண்டனர். துச்சாதனன் முதலிய துரியோதனன் தம்பிமார்கள் சேர்ந்து வீமனை மடக்க முயன்றனர். வீமன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளும், கதையினால் அடித்த அடிகளும், தம்பிமார்களை இரத்தம் சிந்த வைத்தன. வீமனுக்குப் பயந்து இரத்தம் சிந்திக் கொண்டே ஓடினார்கள் அவர்கள். அதைக் கண்டு துரியோதனனே வில்லை வளைத்துக் கொண்டு வீமனை எதிர்க்க வந்தான்.

“என் தம்பியர்களை ஓட ஓட விரட்டிய இந்த வீமனை இன்றைக்குக் கொல்லாமல் விடுவதில்லை” என்று கூவிக் கொண்டே களத்தில் ஆரவாரம் செய்தான் அவன். ஆரவாரத்தோடு ஆரவாரமாகப் பத்து அம்புகளை வீமன் மார்பில் தொடர்ந்து செலுத்தி விட்டான். வீமனின் மார்புக் கவசம் அறுந்து துளைபட்டு விட்டது. தன்மார்புக் கவசம் அறுந்தவுடன் வீமனுக்கும் துரியோதனன் மேல் ஆத்திர வெறிமூண்டு விட்டது. வேகமாக ஒரு கணையை எடுத்துத் துரியோதனன் மார்பைக் குறிவைத்துத் தொடுத்து விட்டான். அந்தக் கணை துரியோதனன் மார்பில் ஆழப்புதைந்து தைத்துவிட்டது. துரியோதனனுக்கு வலி வேதனை பொறுக்க முடியவில்லை. அப்படியே கிறங்கிப் போய் ஒன்றும் தோன்றாமல் நின்று விட்டான் அவன். அப்போது கெளரவர் படையைச் சேர்ந்த வேறோர் அரசனாகிய பூரிசிரவா என்பவன் துரியோதனனுக்குப் பதிலாக வீமனோடு போர் செய்ய முன் வந்தான். வந்த வேகத்தில் குறி தவறாமல் வீமன் மேல் இரண்டு அம்புகளையும் எய்து விட்டான். பூரிசிரவாவும், வீமனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வீமனுக்கு உதவியாகச் சாத்தகி வந்தான். வாளைக் கொண்டும் வில்லைக் கொண்டும் மாறி மாறிப் போர் செய்தார்கள். பெரிய அளவில் களம் முழுவதும் வியாபகமாக நடந்து கொண்டிருந்தது போர். போரின் இந்த வியாபகத்தினால் அன்றைய தினத்தில் மிகுந்த அழிவும் மிகுந்த சேதமும் ஏற்பட்டிருந்தன.