பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அறத்தின் குரல்

இயந்திரத்திற்குள் மீன் போன்ற அடையாளச் சின்னம் ஒன்று இருக்கிறது. இயந்திரத்திற்கு நேரே கீழே பாத்திரத்தில் மஞ்சள் கரைத்த நீர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மஞ்சள் கரைந்த நீரில் தெரியும் பொறியின் நிழலைப் பார்த்துக் கொண்டே மேலே இயந்திரத்தோடு இயந்திரமாக அதனிடையே சுழலும் மீன் சின்னத்தை அம்பு எய்து வீழ்த்த வேண்டும். வில் இதோ இருக்கின்றது. இந்த அருஞ்செயலைச் செய்து நிறைவேற்ற வல்ல மன்னன் எவனோ அவனுக்கு என் தங்கை திரெளபதி மாலையிடுவாள். முடிந்தவர்கள் முன் வந்து செய்யலாம்.”

‘சுயம்வரம் என்றால் கழுத்தை நீட்டியவுடன் சுலபமாக மாலை விழுந்துவிடும்’ -என்று எண்ணிக் கொண்டு வந்திருந்த மன்னர்களைத் திடுக்கிட்டு அஞ்சுமாறு செய்தது இந்த நிபந்தனை. ஆனால் ஆசை என்ற அந்த உணர்வு பயம், வெட்கம் எவற்றையுமே அறியாததல்லவா? தங்களால் நிபந்தனையை நிறைவேற்ற முடியாது என்பதைத் தாங்களே உறுதியாக உணர்ந்து கொண்டிருந்த அரசர்கள் கூட வில்லை எடுத்து முயற்சி செய்யத் தொடங்கினார்கள். இப்படி மன்னாதி மன்னர்களெல்லாம் அவளுடைய அழகு மயக்கத்தில் ஆழ்ந்து நாணமின்றி வில்லேந்தி நின்றார்களே, அப்போது தான் திரெளபதி தன் தோழிகள் மூலம் அவையிலிருந்த அரசர்களைப் பற்றிய விவரங்களை மெல்லக் கேட்டு அறிந்து கொண்டாள். ‘அர்ச்சுனன் வந்திருப்பானோ? வந்திருக்க மாட்டோனோ’ என்ற இந்த உணர்ச்சியால் தவித்துக் கொண்டிருந்தது அவள் உள்ளம்.

‘நான் எய்துகிறேன் பாருங்கள்!’ -‘இதை எய்து வீழ்த்தாவிட்டால் நான் ஆண்மை உடையவனில்லை’ - என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு வஞ்சினம் கூறிவிட்டுத் தோற்றுத்தலை குனிந்தனர் பலர். பெரும்பாலான அரசர்களுக்கு இதே கதிதான் ஏற்பட்டது. சல்லியன் கைதேர்ந்த விற்போர் வீரனாகிய வில்லாளன், பசுதத்தன், சராசந்தன், துரியோதனன் ஆகிய யாவர்களுக்கும் வெற்றி கிடைப்பது போலத் தோன்றி நெருங்கி வரும்போது அதுவே தோல்வியாக