பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

183

விடலாம் போலத் தோன்றியது. தண்டனைக்கு அஞ்சிப் பேசாமல் இருந்தார்கள். அநியாயமான இந்த நிகழ்ச்சி ஊர் முழுவதும் பிரளய நெருப்புப் போல வேகமாக பரவிவிட்டது.

8. அவையில் நிகழ்ந்தவை

ஈரமில்லாத வன்மனம் படைத்த துரியோதனனின் அனவக்குள்ளே கூந்தலைப் பற்றி இழுத்தது. அதே நிலையில் திரெளபதியைக் கூட்டிக் கொண்டு வந்தான் துச்சாதனன். பூனையின் கையில கப்பட்ட உயிருள்ள பசுங்கிளி போல அழுது புலம்பித் துடித்தவளாய் உள்ளே வந்தாள் திரெளபதி. அவளை அந்த நிலையில் காணச் சகியாது தலைகுனிந்து கண்களை மூடிக் கொண்டனர் அவையிலிருந்த அரசர்கள். எத்தகைய அரக்க மனம் படைத்தவர்களையும் இளகச் செய்து விடுமியல்பு வாய்ந்த இந்தக் காட்சியினைக் கண்டு கர்ணன், துச்சாதனன், சகுனி, அரியணையில் வீற்றிருந்த துரியோதனன், ஆகியவர்கள் மட்டும் மனமிரங்காமல் இருந்தனர். ஒருபாவமுமறியாத பெண் ஒருத்திக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி உலகத்திலேயே ஒரு பெரிய குழப்பமாகி விட்டது. திக்குத் திகந்தங்களெல்லாம் தடுமாறி நிலை குலைந்து தவிடுபொடியாவன போல் தோன்றியது. விண்மீன்களும் வானவெளியும் இரத்தக் குழம்பிலே தோய்த்தெடுத்தாற் போலச் செந்நிறமடைந்தன. கடல்தன் எல்லையைக் கடந்து ‘அக்கிரமங்கள் மலிந்து போன இந்த உலகத்தை விழுங்கி விடப் போகிறேன்’ என்று குமுறிக் கொந்தளித்தும் பொங்கி எழுவது போலத் தோன்றியது. அண்ட சராசரங்களும் தட்டுக்கெட்டுக் கொத்துக் கொத்தாகப் பிதிர்ந்து விழுவது போல ஒரு மயக்கம் நிறைந்த குழப்பம் எங்கும் இலயித்துப் போயிருந்தது.

விழிகளில் அனற்கதிர் வீச அந்த அவையில் திரெளபதி நிறுத்தப்பட்டிருந்த அலங்கோல நிலையைப் பார்த்தான்