பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

329

வணக்கம், உபசாரங்கள் முதலியவற்றைச் செய்து அவனை வரவேற்றான்.

“இதோ; இது விருந்தினராகிய தங்களுக்கென்றே அமைக்கப்பட்ட ஆசனம். தாங்கள் இதன்மேல் அமர்ந்து எங்களைக் கெளரவிக்க வேண்டும்” என்று நிலவறையின் மேல் அமைக்கப்பட்டிருந்த வஞ்சக ஆசனத்தைக் கண்ணனுக்குச் சுட்டிக் காட்டினான். அவன் அவ்வளவு விசேடமாக அதைப் பற்றிக் கூறிய போதே கண்ணனுக்கு ‘அந்த ஆசனத்தில் தான் தன்னைக் கவிழ்க்கின்ற வஞ்சகச் சூழ்ச்சி மறைந்திருக்கிற தென்பது’ புரிந்து விட்டது! ஆனாலும் அவனது வேண்டுகோளை மறுக்க விரும்பாதவன் போல் அந்த ஆசனத்தின் மேல் உட்காருவதற்காக ஏறினான். அவன் கால்கள் சரியாக அதன் மேல் பதியக் கூட இல்லை. அதற்குன் அது ‘சடசட’ வென்று முறிந்தது. அடுத்த விநாடி கண்ணன் உடல் எங்கோ இருண்ட பள்ளத்தை நோக்கிக் கீழே இழுக்கப்படுவது போலிருந்தது. கண் இமைகள் அசைகிற நேரந்தான் இந்த அவஸ்தை. உடனே தன்னைச் சமாளித்துக் கொண்ட கண்ணன் விண்ணும் மண்ணும், திசைகளும் ஈரேழு பதினாலு புவனங்களும் அடங்காத தன் விசுவரூபத்தை மேற் கொண்டான். பூமியும் ஆகாயமும் ஒரு ஆட்டம் ஆடிக் குலுங்கின. கண்ணன் திருவடிகள் கீழே கீழே அதல பாதாளத்தை நோக்கித் தாழ்ந்தன. சிரம் மேலே வானமண்டலத்தைத் துளைத்துக் கொண்டு போயிற்று. நிலவறையில் கிடந்த வஞ்சக வீரர்கள் அந்தப் பரம்பொருளின் காலடியில் கிடந்து நசுங்கினர். அந்த விசுவரூபத்தின் சக்தியைத் தாங்கமுடியாமல் ஈரேழு பதினாலு புவனங்களும் பூகம்பம் ஏற்பட்டது போலக் கிடுகிடு என்று நடுங்கின. கோடானு கோடி உயிர் குலங்களின் ஓலம் ஊழிக் கடல் பொங்குவது போன்ற ஓசையை உண்டாக்கியது. மேலும் அந்த ஓலத்தை நீடிக்கச் செய்து உயிர்களைத் துன்புறுத்தக் கூடாதென்று கருதிய கண்ணன் சிறிது தன் சுய உருவை அடைந்து சிரித்துக் கொண்டே துரியோதனனுக்கு