பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

அறத்தின் குரல்

யிருக்கையில் உங்கள் அர்ச்சுனன் மட்டும் பெரிய சபதம் செய்துவிட்டுக் கயிலைக்குப் போவது என்ன நியாயம்? யுத்தம் என்றால் அதில் மரணங்கள் ஏற்படுவது இயற்கைதான். அதைக் கண்டு ஆத்திரமடைவது பேதமை. எவ்வளவு சபதம் செய்தாலும் சரி, எத்தனை சிவபெருமான்களிடத்தில் போய் வரம் பெற்றாலும் சரி, எங்கள் சயத்திரதனை அர்ச்சுனன் கொல்ல முடியாது. நாளைப் போரில் முன்பு அபிமன்னனைக் கொன்றது போலவே அவனுடைய அப்பனான அர்ச்சுனனையும் கொன்று விடுவான் எங்கள் சயத்திரதன். சயத்திரதன் எப்படிப்பட்டவன் என்பதைப் பற்றி இன்று வரைக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாமலிருந்தால் நாளைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று துரியோதனன் கடோற்கசனை நோக்கி ஆத்திரத்தோடு கூறினான். கடோற்கசன் அங்கிருந்தவர்களை எல்லாம் கண்களாலேயே எரித்து விடுகிறவனைப் போல உருத்துப் பார்த்தான்.

“ஏ கடோற்கசா! நான் சொல்வதையும் கேட்டுக் கொள். நீ ஆத்திரப்படுவதில் அர்த்தமே இல்லை. அபிமன்னன் ஒருவன் செத்துத் தொலைந்ததனால் உங்கள் அர்ச்சுனனுக்கு இப்போது என்ன குடிமுழுகிப் போய்விட்டதாம்? ‘உலகாளப் பிறந்த ஒரே மகன் போய் விட்டானே?’ என்று வருத்தமோ? அர்ச்சுனன் ஒருவனுக்குத்தான் சபதம் செய்யத் தெரியுமா? எங்களுக்கெல்லாம் தெரியாதா? நாளைப் போரில் அர்ச்சுனன் சத்திரதனைக் கொல்லச் சபதம் செய்திருந்தால் நாங்கள் அர்ச்சுனனைக் கொல்ல சபதம் செய்கிறோம்” என்று கர்ணன் கூறினான். ஏற்கனவே துரியோதனனுடைய பேச்சைக் கேட்டு குமுறிப் போயிருந்த கடோற்கசன் கர்ணன் கூறியவற்றையும் கேட்டபின் ஆவேசம் கொண்டு விட்டான். அவன் வாயிலிருந்து சிங்கநாதம் கிளம்பியது.

“நீங்கள் எல்லோரும் அற்பர்கள், அறிவிலிகள்; உண்மையான வீரமில்லாதவர்கள். அதனால் உங்களுடைய பேச்சை நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆயினும் ஒரே ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.