பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/449

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
447
 

செய்திருப்பதையும், அதற்கான அஸ்திரங்களைப் பெற்று வருவதற்காகக் கயிலைக்குச் சென்றிருப்பதையும் துரியோதனனிடம் போய்ச் சொல்லி விட்டு வந்து விடுமாறு அனுப்பினான். தருமன் கூறியவைகளை உரைப்பதற்காகத் துரியோதனனிடம் தூது சென்றான் கடோற்கசன். அவ்வாறு செல்வதற்கு முன்னால், “நமது மறைமுகமான ஏற்பாடுகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமென்ன? அபிமன்னனை வஞ்சகமாகக் கொலை செய்த அந்தப் பாவிகள், இப்போது இதை முறியடிக்கவும் முன்கூட்டியே ஏதாவது சூழ்ச்சி செய்வார்களே?” என்று தருமனிடம் அதை வற்புறுத்திக் கூறிப் பார்த்தான்.

“எப்படியாயினும் சரி! நாம் நமது ஏற்பாடுகளைத் தெரிவித்து விடுவதே தருமம். நீ போய்த் தெரிவித்து விட்டு வா..” என்று தருமன் மீண்டும் வற்புறுத்திய பின்புதான் அவன் புறப்பட்டான். கடோற்கசன் துரியோதனாதியர்களுடைய பாசறையில் நுழைந்தபோது அங்கே துரியோதனன் மட்டுமின்றி மற்றவர்களும் கூடியிருந்தனர். பகைவர் படையைச் சேர்ந்தவனான கடோற்கசனை அந்த நேரத்தில் அங்கு வரக் கண்டது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. கடோற்க்சன் அவர்களை மதித்து மரியாதை செய்யவுமில்லை; வணங்கவுமில்லை. அலட்சியமாகத் தான் கூற வேண்டியவற்றைக் கூறி முடித்தான். கடோற்கசன் அர்ச்சுனன் மறுநாள் மாலைக்குள் சயத்திரதனைக் கொல்வதற்காகச் சபதம் செய்திருப்பதையும் அதற்கான அஸ்திரங்களைப் பெற்றுவரக் கயிலைக்குப் போயிருப்பதையும் பற்றிக் கூறியவுடன் துரியோதனனுக்குக் கோபம் வந்து விட்டது.

“இன்றைய போரில் உங்கள் தரப்பில் அபிமன்னன் ஒருவன் தான் இறந்திருக்கிறான். எங்கள் தரப்பிலோ எண்ணற்ற அரச குமாரர்களும், என் அருமை மகன் இலக்கணகுமாரனும் இறந்து போயிருக்கின்றனர். இத்தனை பேர்களைப் பறிக்கொடுத்து விட்டு நாங்கள் சும்மா