பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

529

காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அவனும் போர்க்களத்துக்கு வந்து படைகளை அணிவகுப்பதில் சல்லியனுக்கு உதவியாக இருந்தான்.

கெளரவர் சேனை சல்லியன் தலைமையில் பதினெட்டாம் நாள் போருக்குத் தயாராக அணிவகுத்துக் களத்தில் வந்து நின்றுவிட்டது. ஆனால் பாண்டவ சேனையையோ, பாண்டவ வீரர்களையோ இன்னும் காணவில்லை. அவர்கள் நிலை என்னவென்று இப்போது சென்று கவனிக்கலாம். உண்மையில் பார்க்கப்போனால் கர்ணனுடைய மரணத்தினால் கெளரவர்களைவிட பாண்டவர்கள்தாம் அதிகத் துயரம் அடைந்தனர். கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்ற உண்மை வேறு அவர்களுக்குத் தெரிந்து விட்டதே? அதனால் அவர்களுடைய சோகமும் வேதனையும் வளருவதற்கு வழி ஏற்பட்டதே ஒழியக் குறையவில்லை. எந்த அர்ச்சுனனுடைய கைகள் கர்ணனுடைய மார்பில் அம்பு எய்து கொன்றனவோ, அதே அர்ச்சுனனுடைய கைகள் அன்றிரவு விடிய விடியத் துடி துடித்துக் கொண்டிருந்தன. செய்யத் தகாத காரியத்தைச் செய்து விட்டோமே என்ற வேதனை அவனை உறங்கவிடவில்லை. தருமனுக்கோ இனிமேல் போர் செய்ய வேண்டுமென்ற ஆசையே இருந்த இடம் தெரியாமல் வற்றிப் போய்விட்டது. வீமன், நகுலன், சகாதேவன் முதலிய யாவருமே கர்ணனை இழந்த துன்பத்தில் மூழ்கிப் பதினெட்டாம் நாள் போரை மறந்திருந்தனர்.

கண்ணன் ஒருவன் மட்டும் நினைவூட்டி அவர்களை ஊக்கி முயற்சி செய்திருக்கா விட்டால் அவர்கள் அன்றையப் போருக்குப் புறப்பட்டு வந்திருக்கவே மாட்டார்கள்.

“இன்பமோ? துன்பமோ? க்ஷத்திரியர்களாகப் பிறந்தவர்கள் அவற்றில் முற்றிலும் ஆழ்ந்து மூழ்கிப் போய்விடக்கூடாது. க்ஷத்திரியனுக்குக் கடமையைவிடப் பெரியது ஒன்றுமில்லை. அதை மறப்பதைவிடக் கேவலமும் வேறொன்று இல்லை. துன்பத்தை மறந்து போருக்குப்

அ கு - 34