பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

401

குலத்துக்கே பெருமை அளித்துக் கொண்டிருந்தவனும் இணையற்ற வீர புருஷனும் ஆகிய வீட்டுமன் சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி கண்ணில்லா மன்னனைக் கண்ணீர் விட்டு அழச் செய்தது. துயரத்தில் ஆழ்ந்துபோனான் துரியோதனனின் தந்தை. “பதினோராவது நாள் போருக்கு யாரைப் படைத்தலைவராக்கலாம்?” -என்ற சிந்தனையில் மூழ்கினான் துரியோதனன்.

வீட்டுமன் அபிப்பிராயப்படியே கர்ணனை நியமிக்கலாம் என்று முதலில் அவன் எண்ணினான். பின்பு சிந்தித்ததில் அது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆகவே கர்ணனை இப்போதே தலைவனாக நியமித்து விட்டால் பின்பு கடைசிக் காலத்தில் நமக்கு வேறு யார் துணையாக இருக்க முடியும்? ஆகவே கர்ணனை இப்போது நியமிக்க வேண்டாம். பின்பு பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு துரோணரைப் படைத்தலைவராக நியமித்து விடலாம்’ -என்று தனக்குத் தானாகவே ஒரு புதுத் தீர்மானம் செய்து கொண்டான் துரியோதனன். தன் தீர்மானப்படியே துரோணரை அழைத்து “வீட்டுமர் மரணப்படுக்கையில் இருப்பதனால் அவர் இதுவரை ஏற்றுக் கொண்டிருந்த படைத் தலைமைப் பதவியை இனிமேல் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுக்கக்கூடாது” என்று வேண்டிக் கொண்டான். துரியோதனனின் இந்த வேண்டுகோளைத் துரோணர் மறுக்கவில்லை. படைத்தலைமையை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டார். கெளரவசேனை முழுவதும் துரோணரைப் புதுப்படைத் தலைவனாக ஏற்று அதற்குரிய மரியாதைகளையும் சிறப்புகளையும் அவருக்குச் செய்தன. யாவரும் பதினோராவது நாள் காலை விடியப் போவதை எதிர்பார்த்திருந்தனர்.

(வீட்டும பருவம் முற்றும்)

அ.கு.-26