பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

அறத்தின் குரல்

குற்றத்தை மன்னித்து இந்தக் குலம் வாழ வழி செய் அம்மா” -திருதராட்டிரனுடைய வேண்டுகோளில் மன உருக்கம் புலப்பட்டது. அவனுடைய அந்த உருக்கம் மிகுந்த வேண்டுகோளால் திரெளபதியின் மனக்கலக்கம் கூட ஓரளவு குறைந்தது, பாண்டவர்களிடமும் இதே மாதிரி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் அவன். சூதில் அவர்கள் பறிகொடுத்த எல்லாப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்து விடுவதாகவும் உறுதி கூறினான். “தம்பியின் புதல்வர்களே! உங்கள் ஆட்சி, அரசு, உடமைகள் எல்லாவற்றையும் மீட்டுத் தருகிறேன். என் புதல்வர்களின் குற்றங்களை எல்லாம் மன்னித்து மறந்து விட்டு உங்கள் தலைநகருக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று பாண்டவர்களைக் கெஞ்சினான் திருதராட்டிரன்.

தங்கள் பெரிய தந்தையின் வேண்டுகோளுக்குப் பாண்டவர்கள் இணங்கி விடுவார்கள் போலிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சகுனியின் தடை முன்னே வந்து நின்றது. ‘பாண்டவர்களையும், திரெளபதியும் விடுதலை செய்யக் கூடாது. அவர்கள் சூதாட்டத்தில் பறி கொடுத்த பொருள்களைத் திரும்பக் கொடுத்து விடுவதும் முறையல்ல! தருமன் முதலிய ஐவரும் நமக்கு எதிரிகள். என்றைக்கிருந்தாலும் அவர்கள் நம்மை அழித்துத் தொலைத்து விடுவதற்கே முயற்சி செய்வார்கள். இப்போது அதிர்ஷ்டவசமாக அவர்கள் நம்முடைய கைதிகளைப் போல் அடிமைப்பட்டிருக்கிறார்கள். இப்போது நாம் அவர்களை அழித்து ஒழித்து விட முயல்வது தான் புத்திசாலித்தனம். இப்போது பாண்டவர்களை இப்படியே விட்டுவிட்டால் நாம் செய்திருக்கும் அவமானங்களுக்கெல்லாம் பழி வாங்குவதற்காக உடனே படையெடுத்து வரத் தயங்கமாட்டார்கள் அவர்கள் ஆகவே நன்கு சிந்தித்து இந்தச் செயலை முடிவு செய்ய வேண்டும். பாண்டவர்களை விடக் கூடாது’ சகுனியின் மேற்படி பேச்சையே துரியோ தன்னுடைய மனமும் விரும்பியது.