பெருங்கதை/2 6 தெய்வச் சிறப்பு

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

2 6 தெய்வச் சிறப்பு

நல்லோர் கூற்று[தொகு]

இன்புற் றிருவரு மியைந்துடன் போகிய
நன்பெருங் காலை நல்லோர் குழீஇக்
கண்கெழு பெருஞ்சிறப் பியற்றிப் பண்புளிப்
பூப்புரி மாடத்துப் போற்றெனப் புகாஅத்
தேவ குலத்தொடு திருநகர் வலஞ்செயல் 5
காவல குமரர் கடிநாட் கடனென
வென்றி முழக்கங் குன்றாது வழங்குநர்
முன்னர் நின்று முன்னியது முடிக்கென
மங்கல மரபினர் மரபிற் கூறக்

உதயணன் ஆலயத்திற்குச் செல்லல்[தொகு]

காவல குமரனுங் கடிநகர் வலஞ்செய 10
மேவின னருள மேவரப் புனைந்த
பசும்பொ னலகிற் பவழத் திரள்கால்
விசும்பிவர் மதியுறழ் வெண்பொற் போர்வைத்
தாம நெடுங்குடை தகைபெறக் கவிப்பக்
காமர் கோலங் காண்மி னீரென 15
ஏமண் ணெங்கோ லேயர் பெருமகன்
செம்பொற் செருப்பிற் சேவடி யிழிந்து
வெண்பூ நிரந்த வீதியு னியங்கி
நகர்வலங் கொள்ளு நாண்மற் றின்றெனப்
பகலங் காடியிற் பல்லவ ரெடுத்த 20
பல்வேறு கொடியும் படாகையு நிரைஇ
யாறுபுகு கடலின் மாறுதிரை மானக்
கண்ணுற்று நுடங்கிக் காரிருள் கழுமி
விண்ணுற் றியங்கும் வெய்யோ னழுங்க
மரீஇய மாந்தரு மனைகெடுத் துழன்றிது 25
பொரீஇக் காணிற் போக பூமிக்
குருமடங் கினிதெனப் பெருநக ருற்ற
செல்வக் கம்பலை பல்லூழ் நிறைந்து
மாண்பதி யுறையுநர் காண்பது விரும்பித்
தன்னி னன்றியுந் தமக்குவழி வந்த 30
குலப்பெருந் தெய்வங் கூப்புத லானும்
அரிமலர்க் கண்ணியொ டகநாட்டுப் பெயரும்
கருமக் காலைப் பெருவரம் பெறுகென
உள்ளகத் துணர்ந்த்தை யுண்மை யானும்
சுருக்க மின்றிச் சுடர்ப்பிறை போலப் 35
பெருக்கம் வேண்டிப் பெருநில மன்னவன்
ஆரணங் காகிய வறிவர் தானத்துப்
பூரணப் படிமை காண்ட லானும்
இன்னவை பிறவுந் தன்னிய லாதலின்

சினாலயம்[தொகு]

ஆணப் பைம்பொ னடித்தொடைப் பலகைக் 40
கோணங் கொண்ட கொளூஉத்திரட் சந்துமிசை
உறுப்புப்பல தெரிந்த சிறப்பிற் றாகிச்
செம்பொ னிட்டிகைத் திண்சுவ ரமைத்துக்
குடமுந் தாமமுங் கொழுங்கொடிப் பிணையலும்
அடர்பூம் பாலிகை யடிமுதற் குளீஇப் 45
புடைதிரண் டமைந்த போதிகைப் பொற்றூண்
வேண்டக மருங்கிற் காண்டக நிறீஇ
வரிமான் மகர மகன்றில் யானை
அரிமா னன்ன மணிநிற வெண்கினம்
குழவிப் பாவையொ டழகுபெறப் புனைந்து 50
பொருவில் பூதத் துருவுபட வரீஇ
மரகத மாலை நிரலமைத் திரீஇ
எரிமலர்த் தாமரை யிலங்கொளி யெள்ளிய
திருமணிக் கபோதஞ் செறியச் சேர்த்திப்
பத்திப் பல்வினைச் சித்திரக் குலாவின் 55
ஒத்தமைத் தியன்ற சத்திக்கொடி யுச்சி
வித்தக நாசி வேண்டிடத் திரீஇத்
தூண்மிசைக் கேற்ப வேண்முள் ளழுத்திய
போதிக் கொத்த சாதிப் பவழக்
கொடுங்காழ்க் கோவைக் கடுங்கதிர்ப் பிணித்திரள் 60
அவ்வயிற் கேற்றுக் கவ்விதிற் பொலிந்து
நீல வுண்மணிக் கோலக் குழிசி
புடைத்துளைக் கேற்ற விடைத்துளை யாப்பின்
அமைத்துருக் கியற்றிய வாடகப் பொன்னின்
விசித்திரத் தியற்றிய வித்தக வேயுட் 65
டீஞ்சுவை நெல்லித் திரள்காய்த் தாரையுட்
கூப்புபு பிணித்த கூடப் பரப்பிற்
கட்டளை யமைத்துக் கட்கினி தாகி
எட்டுவகைப் பெருஞ்சிறப் பேற்ப வெழுதி
ஒட்டிய வனப்பினோ ரோட வுத்தரத் 70
தொண்மணிப் புதவிற் றிண்ணிதிற் கோத்த
பொறிநிலை யமைந்த செறிநிலைப் பலகை
வள்ளியும் பத்தியு முள்விரித் தெழுதி
ஒள்ளொளி திகழும் வெள்ளிக் கதவின்
பக்கம் வளைஇய நித்திலத் தாமம் 75
சித்திர மாலையொடு சிறந்தொளி திகழ
வளவிற் கமைந்த வாயிற் றாகி
நிலவிற் கமைந்த நிரப்ப மெய்தி
மண்ணினு மரத்தினு மருப்பினு மன்றிப்
பொன்னினு மணியினுந் துன்னெழி லெய்தி 80
அடியிற் கேற்ற முடியிற் றாகி
அங்கண் மாதிரத் தணியழ குமிழும்
பைங்கதிர்ச் ணெல்வனொடு செங்கதிர்க் கியன்ற
வாலொளி மழுங்க மேலொளி திகழப்
பரூஉப்பணைப் பளிங்கிற் பட்டிகை கொளீஇ 85
வேற்றொழில் பொலிந்த மாற்றுமருங் கமைத்துக்
காம்புங் கதிருங் கூம்புமணிக் குமுதமும்
பாங்குற நிரைத்த பயிற்சித் தாகிப்
பத்திச் சித்திரப் பன்மணிக் கண்டம்
வித்தக வண்ணமொடு வேண்டிடத் தழுத்தி 90
அரும்பும் போதுந் திருந்துசினைத் தளிரும்
பெருந்த ணலரொடு பிணங்குபு குலாஅய்
உருக்குறு பசும்பொ னுள்விரித் தோட்டிக்
கருத்தி னமைந்த காம வள்ளி
கோணச் சந்தி தோரணங் கொளீஇ 95
மாலை யணிநகை மேலுற வளைஇ
நீலத் திரண்மணிக் கோலக் கருநிரை
இடையிற் கேற்றுப் புடையிற் பொலிந்து

சிங்காதனம்[தொகு]

விழைதரு விழுச்சீர் மந்த மாமலை
முழையிற் போதரு முயற்சி போல 100
முதனிலைப் பலகைச்சுவன்முத லோச்சி
மூரி நிமிர்வன போல வேர்பெற்று
வைந்நுதி யமைந்த வயிர வாயிற்
கண்ணிழ லிலங்கு மொளியிற் றாகிப்
பவழ நாவிற் றிகழ்மணிப் பகுவாய்ப் 105
பசுமணிப் பரூஉச்செவிப் பன்மணிக் கண்டத்
துளைமயி ரணிந்த வுச்சிக் கேற்ப
வாய்புகு வன்ன வந்தொசி கொடிபோற்
சென்றுசெறிந் திடுகிய நன்றுதிர ணடுவிற்
றகைமணிக் கோவை தன்கைக் கேற்பப் 110
பரூஉத்திரட் குறங்கிற் பளிக்குமணி வள்ளுகிர்த்
திருத்தஞ் செறிந்து திகழ்ந்துநிழல் காட்டும்
உருக்குறு தமனியத் தொண்பொற் கட்டில்
அணிப்பொலிந் தியன்ற வழலுமி ழரிமான்
உச்சியிற் சுமந்துகொண் டோங்குவிசும் பிவர்தற்கு 115
நச்சி யன்ன வுட்குவ ருருவிற்

சினதேவனும் வழிபடுவோரும்[தொகு]

றருமா ணாசனத் திருநடு விலங்க
இருந்த வேந்தைப் பொருந்து மருங்குற்
றலைவா யுற்றுத் தலையெழிற் பொலிந்து
சிலைகவிழ்த் தன்ன கிம்புரி கவ்வி 120
நிழல்காட் டாடி நிழன்மணி யடுத்துக்
கோலங் குயின்ற நீலச் சார்வயல்
வாடாத் தாரினர் சேடார் கச்சையர்
வட்டுடைப் மொலிந்த கட்டுடை யல்குலர்
மலர்ந்தேந் தகலத் திலங்குமணி யாரத் 125
துடன்கிடந் திமைக்கு மொருகாழ் முத்தினர்
முழவுறழ் மொய்ம்பினர் முடியணி சென்னியர்
கழுமணிக் கடிப்பினர் கடகக் கையினர்
புடைதிரண் னமைந்த பொங்குசின நாகம்
இடைநிரைத் தன்ன வெழில்வளை கவ்விய 130
எழுவுறழ் திணிதோ ளெடுத்தன ரேந்திப்
புடையிரு பக்கமும் போதிகை பொருந்தித்
தொடையமை கோவை துளங்குமணிப் பன்னகை
முகிழ்முடிச் சிறுநுதன் முதிரா விளமை
மகிழ்நகை மங்கையர் மருங்கணி யாகப் 135
புடைதிரண் டியங்கும் பொங்குமணிக் கவரி
அடைவண் டோப்பு மவாவினர்போல
எழின்மணி யியக்கத் தொழில்கொண் டீய
மணிவிளக் குழுமி மணிநிலாச் சுவர்மிசை
வலத்தா ணீட்டி யிடத்தாண் முடக்கிப் 140
பொன்பொலிந் தியலும் பொங்குபூந் தானைப்
பசும்பொற் கச்சை பத்தியிற் குயின்ற
விசும்பக நந்தும் வேட்கையர் போலத்
தாமரைத் தடக்கையிற் றாம மேந்தி
விச்சா தரர்நக ரெச்சாரு மயங்கி 145
நீனிற முகிலிடைக் காமுறத் தோன்றத்
திருமுடி யிந்திர ரிருநிலக் கிழவர்
உரிமை மகளிரொ டுருவுபடப் புனைந்த
பொத்தகக் கைவினைச் சித்திரச் செய்கைத்
தத்தந் தானத் தத்தக நிறீஇ 150
அழகுபடப் புனைந்த வலங்குமணித் தவிசின்மிசை
நிறைகதிர் வெண்மதி நிலாவொளி விரிந்து
முறையின் மூன்றுட னடுக்கின போலத்
தாம முக்குடை தாமுறை கவிப்ப
உலக வெள்ளத் தாழும் பல்லுயிர்க் 155
கலகை யாகிய வருந்தவக் கிழவனை

உதயணன் செயல்[தொகு]

இருக்கை யியற்றிய திருத்தகு செல்வத்
தாரணங் காகிய வணிகிளர் வனப்பிற்
பூரணம் பொலிமை புகழ்ந்துமீக் கூறித்
திருமணி யடக்கிய செம்பொற் செப்பின் 160
அருமணி சுடரு மராஅந் தாணம்
உரிமைச் சுற்றமொ டொருங்குடன் றுன்றிக்
கதிவிளக் குறூஉங் கருத்தினன் போல
விதியிற் சேர்ந்து துதியிற் றுதித்துப்
பெறற்கரும் பேதையைப் பெறுகெனப் பரவிச் 165
சிறப்பெதிர் கொள்கைச் சித்திக் கிழவன்
பேரறம் பேணிய சீர்நெறிச் சிறப்பிற்
றெய்வதை யமர்ந்தெனக் கைம்முதல் கூப்பி
விரவுமலர்ப் போதொடு வேண்டுவ வீசிப்
பரவுக்கடன் கழித்தனன் பைந்தா ரோனென். 170

2 6 தெய்வச் சிறப்பு முற்றிற்று.