202
வஸந்தமல்லிகா
இனி எந்தச் சமயத்தில் உனக்கு என்னவிதமான உதவி தேவையோ அதை நீ என்னிடம் பெற்றுக்கொள்ளத் தடையில்லை. பீமராவும் நிரம்ப நல்லவன். உன்னை அன்போடு நடத்தும்படி அவனுக்குப் புத்திமதி சொல்லியிருக்கிறேன். நீ கவலைப்படாதே! நான் போய் விட்டு வருகிறேன்; மறந்து விடாதே - என்றார்.
அவரது பேரன்பையும் தயாளத்தையும் நற்குணத்தையும் கண்ட மல்லிகா எவ்விதமான மறுமொழியும் சொல்ல மாட்டாதவளாய்க் கீழே குனிந்த வண்ணம் நின்றாள். நன்றியறிதலின் பெருக்கால் அவளது கண்களில் கண்ணீர் ததும்பியது. சொல்ல நினைத்த வார்த்தைகள் விசனத்தினால் தொண்டையில் தடைப் பட்டன. "போய் விட்டு வாருங்கள். தங்களுடைய மேன்மைக் குணத்துக்கு ஈசுவரன் எப்படியும் சகாயம் செய்வான்" என்றாள். உடனே மோகனராவ் கிருஷ்ணவேணியிடத்திலும் சொல்லி விட்டுக் கீழே இறங்கினார். இறங்கி வீட்டிற்கு வெளியில் வந்தவுடன் அவர் நெடுமூச்செறிந்தார். மல்லிகாவை வேறொருவன் கையிற் பிடித்து மணப்பந்தலில் நிற்கும் கோலத்தைக் காண மனமற்றவராய், அவர் உடனே அவ்வூரை விட்டுப் போய்விடத் தீர்மானித்தார். அன்றிரவே புறப்பட்டு அவர் சென்னைக்குப் பிரயாணமாகி மறுநாள் புரசைவாக்கத்திலிருந்த தனது பங்களாவிற்கு வந்து சேர்ந்தார்; தஞ்சையிலிருந்து அதிக தூரத்தில் உள்ள இடமாகிய சென்னைக்கு வந்தால், மல்லிகாவின் நினைவு மாறும் என்னும் எண்ணத்தோடு அங்கே வந்தார். ஆனால், சென்னைக்கு வந்தபிறகு, அவளது நினைவு அவரை விட்டு அகலாமலே இருந்து வருத்தியது. நாலைந்து நாட்கள் வரையில், அவர் வெளியில் எங்கும் போகாமல், ஏக்கங் கொண்டவராய்த் தமது பங்களாவிலேயே இருந்தார். பார்த்த இடமெல்லாம் மல்லிகாவின் வடிவமே அவருக்குத் தோன்றியது.
அந்தச் சங்கடமான நிலைமையில், கடற்கரை முதலிய இடங்களுக்குப் போனாலாகிலும் ஒருவேளை தமது மனதின் வேதனை நீங்குமோ என்று நினைத்தவராய், அவர் ஐந்தாம் நாள் சாயங்காலம் பங்களாவை விட்டு வெளிப்பட்டு, மெல்ல நடந்து வழியிலிருந்த பல காட்சிகளில் தமது நினைவைச் செலுத்த முயன்றவராய்க் கடற்கரைக்குச் சென்றார். அப்போது மாலை ஆறு மணி நேரம் இருக்கலாம். மணலின் மீது சிறிது தூரம் அவர்