உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகத்தை வென்ற வஞ்சி

225

(மோகனராவிடம் கொடுத்து ) இதுதானா நீங்கள் கண்டுபிடித்தது? பாருங்கள்)" என்றாள்.

அவர் அதை வாங்கிப் பார்த்து, "ஆம்; இதுதான்! இதுதான்!" என்று சொல்லி ஆநந்தக் கூத்தாடினார். அங்கிருந்த மற்றவரும் திக்பிரமை கொண்டு கல்லாய்ச் சமைந்து நின்றனர்.

பீம : எங்கே? நான் பார்க்கிறேன் - என்று சொல்லிக் கொண்டு அருகில் நெருங்கினான்.

தம : காட்டுங்கள்; பார்க்கட்டும். இதற்கு இவன் ஏதாவது கெடுதல் செய்ய முயன்றால், இவனை இவ்விடத்திலேயே துகைத்து விடுவோம். அடே பீமா! மினுக்கிக் குலுக்கும் கூத்தாடி யாகிய நான் போலீஸ் உத்தியோகம் எப்படிச் செய்தேன் என்று பார்த்தாயா? இதை உனக்கெதிரில் உன்னிடமிருந்தே நான் எடுத்ததை அறிந்து கொள்ளக் கூடாத மூட சிகாமணியாகிய நீ எங்களைப் புரளி செய்கிறாய்?

மோ : (சந்தோஷத்தோடு) தமயந்தி! நீ இதை எப்படி எடுத்தாய்?

தம : இவனுடைய ரகசியங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் இவன் இருக்கும் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்ததையும், இவன் செய்ததையெல்லாம் சுவரின் துளை வழியாக அறிந்ததையும் முன்னமேயே சொன்னேன் அல்லவா? இந்தப் பத்திரத்தை இவன் தினம் இரவில் தன் மடியிலிருந்து எடுத்துப் படித்தப் பின் தனது மேஜையின் மேல் வைத்துவிட்டு நித்திரை செய்வான். விடியற்காலையில் திரும்பவும் எடுத்து மடியில் வைத்துக் கொள்ளுவான். இதை அறிந்த நான் நேற்று இரவு இவனுக்குத் தெரியாமல் இவன் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டிருந்து இவன் தூங்கிய சமயத்தில், இவனறைக்குள் நுழைந்து, மேஜையின் மேல் இருந்த சாஸனத்தை எடுத்துக் கொண்டு அதைப்போல முன்னதாகவே தயாரித்த வேறொரு காகித மடிப்பை அந்த இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதை இந்த முட்டாள் அறியாமல் அந்த வெற்றுக் காகிதத்தை இதுவரை சுமந்து திரிந்ததும் அன்றி அது உண்மையானதென்று நினைத்துக் கொண்டு இவ்வளவு ஆடம்பரம் செய்து விட்டான் வடிகட்டின மூடன் - என்றாள்.

வ.ம.-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/243&oldid=1234033" இலிருந்து மீள்விக்கப்பட்டது