பெண்டாட்டிப்பித்து
83
கிழவன் சற்றுநேரம் அவரை உற்றுநோக்கி, "எஜமானே! என்ன விசேஷம்? தங்கள் முகம் ஏதோ பெருத்த ஸஞ்சலத்தை காண்பிக்கிறதே! எவ்விதமான துன்பமாயிருந்தாலும் அதைத் தெரிவித்தால் என்னாற்கூடிய உதவி செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.
"ஸகாராம்! உண்மையை எப்படித் தெரிவிப்பேன்! என் மனம் படும்பாட்டை என்னவென்று சொல்லுவேன்! நான் அதிசீக்கிரத்தில் கலியானம் செய்து கொள்ள வேண்டுமென்னும் எண்ணத்தோடு அழைத்து வந்த அருமையான ஒரு பெண்ணை இழந்து விட்டேன்" என்று விசனத்தோடு கூறினார் ஜெமீந்தார்.
"அடடா! அப்படியா எப்போது அப்படி நடந்தது?" என்று வியப்போடும் விசனத்தோடும் கேட்டான் கிழவன்.
"இன்று விடியற்காலம் நாங்களிருவரும் இந்த ஊருக்கு வந்தோம். சத்திரத்தைச் சேர்ந்த ஒரு விடுதியில் அவளை வைத்து விட்டு நான் இரண்டு நாழிகை நேரம் வெளியிற்போயிருந்து வந்து பார்க்கிறேன்; அவள் காணப்படவில்லை" என்றார் வஸந்தராவ்.
"ஒருவேளை தன்னுடைய சொந்தக்காரர்களிடத்துக்குத் திரும்பிப் போயிருப்பாளோ?" என்றான் கிழவன்.
வஸ : அங்கே போயிருக்க மாட்டாள்.
ஸகா : அவள் எனக்குத் தெரியாதவளோ?
வஸ : அவள்தான் மல்லிகா!
ஸகா : மல்லிகாவா என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
வஸ : ஆம்! துக்கோஜிராவோடு நம்முடைய பங்களாவுக்கு வந்தாளே அவளைத் தெரியாதா? பரசுராம பாவாவின் இளைய மனைவியுடைய படத்தைப்போல இருந்தாளே அந்தப் பெண்.
ஸகா : ஒகோ! அவளா! அவளை எனக்கு நன்றாய்த் தெரியுமே! தங்களோடு வந்தவள் எங்கே போயிருப்பாள்? அதிசயமாக இருக்கிறதே! இருக்கட்டும்; நான் இப்போதே அவளைத் தேடிக் கண்டு பிடிக்கிறேன்.
வஸ : அவளைக் கண்டுபிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் தருகிறேன். நீர் எப்படியாவது எனக்கு இந்த உதவி செய்ய வேண்டும்.