உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல்லிகாவின் பிணம்

103

வைத்தியசாலையில் இருந்தவர்கள் தன்னைக் காணக்கூடாத மறைவிற்குப் போனபிறகு, அவன் தனது விசனக் குறியை மாற்றிக் கொண்டான். மல்லிகா இறந்து விட்டதாக வஸந்தராவ் ஸகாராம்ராவ் ஆகிய இருவருக்கும் தெரிவித்து விட்டால், பிறகு வஸந்தராவ் அவளைப் பற்றிக் கவனிப்பதை விட்டு விடுவார் என்றும், தான் பிறகு மல்லிகாவைக் கண்டு அவளை மணந்து, அவளது ஐசுவரியத்தையெல்லாம் அபகரித்து விடலாமென்றும் நினைத்துக்கொண்டு அவன் தனது வீடு போய்ச் சேர்ந்தான். அங்கு அவனது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஸகாராம்ராவ், "என்ன விசேஷம் ? சிறுக்கி அகப்பட்டாளா?” என்றான்.

"ஆம்; அவளுடைய பிணந்தான் அகப்பட்டது. வைத்திய சாலையில் கிடக்கிறது" என்றான் பீமராவ். "பிணமா! என்னடா பைத்தியமா? வேறு யாராவது இறந்திருக்கலாம்" என்றான் ஸ்காராம்ராவ்.

"இல்லை இல்லை. நிச்சயமாக அவளே ஆற்றில் விழுந்து இறந்து போய்விட்டாள். வஸந்தராவ் இங்கே வந்தால் அவரை உடனே அழைத்துக்கொண்டு போய்ப் பிணத்தைக் காட்டும்; அதன் மேலிருக்கும் சால்வையைப் பார்ப்பதே போதுமானது. ஆனால், இதில் நான் ஒரு பொய் சொல்லியிருக்கிறேன். பொய் வெளியாய்விடப் போகிறது. அதிக நேரம் தாமதிக்காமல் பார்த்துவிட்டு வந்து விடுங்கள்; நான் ஒரு அவசர காரியமாகப் போய்விட்டு வருகிறேன்" என்றான். அந்தச் சமயத்தில் வாசற்கதவை யாரோ இடித்தார்கள். பீமராவ் உடனே புறப்பட்டுப் போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/121&oldid=1231949" இலிருந்து மீள்விக்கப்பட்டது