உள்ளடக்கத்துக்குச் செல்

அருள்விளக்க மாலை

விக்கிமூலம் இலிருந்து

திருவருட்பிரகாச வள்ளலார்

[தொகு]

திருவாய் மலர்ந்தருளிய

[தொகு]

அருள்விளக்க மாலை (01-20)

[தொகு]

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

பாடல்: 01 (அருள்விளக்கே)

[தொகு]
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என்னறிவே என்னுயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருளளித்த திருவாளா ஞானவுரு வாளா
தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே! (01)
அருஞ்சொற்பொருள்
இருள்= அறியாமை; கடிந்து= நீக்கி; மருள்= மயக்கம்; மன்றில்= திருவம்பலம்; தெருள்= தெளிவு.

பாடல்: 02 (கோடையிலே)

[தொகு]
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியப்பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே! (02)
அருஞ்சொற்பொருள்
தரு= மரம்; அலங்கல்= மாலை.


பாடல்: 03 (இன்புறநான்)

[தொகு]
இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநற் றுணையே
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
இச்சையுற்ற படியெல்லாம் எனக்கருளும் துரையே
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
தூயதிரு வடிகளுக்கென் சொல்லுமணிந் தருளே! (03)
அருஞ்சொற்பொருள்
எய்ப்பு= இளைத்தகாலத்தில்/பொருளற்ற காலத்தில்; வைப்பு= வைப்புநிதி.

பாடல்: 04 (ஒசித்தகொடி)

[தொகு]
ஒசி்த்தகொடி யனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
பசித்தபோது எதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
பயந்தபொழு தெல்லாமென் பயந்தவிர்த்த துரையே
நசித்தவரை யெழுப்பியருள் நல்கியமா மருந்தே
நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
களித்தெனது சொன்மாலை கழலிலணிந் தருளே! (04)
அருஞ்சொற்பொருள்
ஒசித்த= வளைந்த; கொடியனையேன்= கொடிபோன்றவன்; பற்று= கொழுகொம்பு; நசித்தவர்= இறந்தவரை;


பாடல்: 05 (மனமிளைத்து)

[தொகு]
மனமிளைத்து வாடியபோ தென்னெதிரே கிடைத்து
வாட்டமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளி்த்த நிதியே
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனமெனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
என்னுடைய சொன்மாலை யாவுமணிந் தருளே! (05)
அருஞ்சொற்பொருள்
சினம்= கோபம்; அனம்= அன்னப்பறவை;உகைத்தான்= பிரமன்; அரி= திருமால்;

பாடல்: 06 (கங்குலிலே)

[தொகு]
கங்குலிலே வருந்தியவென் வருத்தமெலாம் தவிர்த்தே
காலையிலே எனுளத்தே கிடைத்தபெருங் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
சேர்த்தணிந்தென் றனைமணந்த தெய்வமண வாளா
எங்குமொளி மயமாகி நின்றநிலை காட்டி
என்னகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்தருளே!
அருஞ்சொற்பொருள்
கங்குல்= இரவு; துங்கமுற= மேன்மையுறும்படி;


பாடல்: 07 (கரைந்துவிடாதென்)

[தொகு]
கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே யிருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தவரு ளமுதே
மெய்யருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்னுடம்பே யாகித்
திகழ்ந்தழியா தோங்கவருள் சித்தேமெய்ச் சத்தே
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் யரசே
மகிழ்வொடுநான் புனைந்திடுஞ் சொன்மாலை யணிந்தருளே!
அருஞ்சொற்பொருள்
திரைந்த= சுருக்கங்கள்நிறைந்த;

பாடல்: 08 (கதிக்குவழி)

[தொகு]
கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேயென் கண்ணில்
கலந்தமணி யேமணியில் கலந்தகதி ரொளியே
விதிக்குமுல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
மறைமுடியா கமமுடிமேல் வயங்குமின்ப நிறைவே
துதிக்குமன்பர் தொழப்பொதுவில் நடம்புரியு மரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளிலணிந் தருளே!

பாடல்: 09 (அண்டவளவெவ்)

[தொகு]
அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தசரா சரவளவெவ் வளவோவவ் வளவும்
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளி்ககு நடுவே
விளங்கியொரு பெருங்கருணைக் கொடிநாட்டி யருளாம்
தண்டகுமோர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
தனியரசே என்மாலை தாளிலணிந் தருளே! (09)

பாடல்: 10 (நல்லார்சொல்)

[தொகு]
நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
வழுத்துமொரு நாதாந்தப் பதிகள்பல கோடி
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
என்னரசே என்மாலை இனிதுபுனைந் தருளே! (10)

பாடல்: 11 (நாட்டியதோர்)

[தொகு]
நாட்டியதோர் சுத்தபரா சக்தியண்டம் முதலா
ஞானசக்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூ்ட்டியபொன் முடியிலங்கச் சமரசமெய்ஞ் ஞான
சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையி லமர்ந்தே
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொலணிந் தருளே!

பாடல்: 12 (தன்பெருமை)

[தொகு]
தன்பெருமை தானறியாத் தன்மையனே எனது
தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
நின்பெருமை நானறியேன் நான்மட்டோ அறியேன்
நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளு மறியார்
அன்புறுமா கமமறைகள் அறியாவே எனினும்
அவருமவை களும்சிலசொல் லணிகின்றார் நினக்கே
என்பவரும் குறியாதே எனையாண்ட அரசே
யானுமவர் போலணிகின்றேன் அணிந்திங் கருளே!

பாடல்: 13 (உண்ணவுண்ணத்)

[தொகு]
உண்ணவுண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் னுடம்போடு
உயிருணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
ததும்பியென்றன் மயமெல்லாம் தன்மயமே யாக்கி
எண்ணியவென் எண்ணமெலாம் எய்தவொளி வழங்கி
இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
புண்ணியமே என்பெரிய பொருளேயென் அரசே
புன்மொழியென் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே! (13)

பாடல்: 14 (நாட்டார்கள்)

[தொகு]
நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
நடுவிருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
கோவேயென் கணவாஎன் குரவாஎன் குணவா
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
நீதிநடத் தரசேயென் நெடுமொழிகொண் டருளே! (14)

பாடல்: 15 (கைக்கிசைந்த)

[தொகு]
கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே, கண்ணேயென் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையிலென் னுடனே, மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே, நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே, புன்மொழியென் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே! (15)

பாடல்: 16 (கொடுத்திடநான்)

[தொகு]
கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே, கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை, வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே, என்னுயிரே என்னுயிருக் கிசைந்தபெருந் துணையே
தடுத்திடவல் லவரில்லாத் தனிமுதற்பே ரரசே, தாழ்மொழியென் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே! (16)

பாடல்: 17 (தனித்தனி)

[தொகு]
தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தெங்கின் தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டி னிறக்கி, எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே, அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே! (17)

பாடல்: 18 (மலைவறியாப்)

[தொகு]
மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே, மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
விலையறியா உயராணிப் பெருமுத்துத் திரளே, விண்ணவரும் நண்ணருமோர் மெய்ப்பொருளின் விளைவே
கொலையறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங் கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
நிலையறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல் லணிந்தருளே! (18)

பாடல்: 19 (கண்களிக்கப்)

[தொகு]
கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே, பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம வல்லியென மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்புமணிந் தருளே! (19)

பாடல்: 20 (உருவெளியே)

[தொகு]
உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே, உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே, பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
மருவொழியா மலரகத்தே வயங்கு?ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
திருவொழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே, சிறுமொழியென் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே! (20)




பார்க்க
அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள்
அருள்விளக்க மாலை (21-40)
அருள்விளக்க மாலை (41-60)
அருள்விளக்க மாலை (61-80)
அருள்விளக்க மாலை (81-100)
"https://ta.wikisource.org/w/index.php?title=அருள்விளக்க_மாலை&oldid=27439" இலிருந்து மீள்விக்கப்பட்டது