அருள்விளக்க மாலை (61-80)
Appearance
திருவருட்பிரகாச வள்ளலார்
[தொகு]திருவாய் மலர்ந்தருளிய
[தொகு]அருள்விளக்க மாலை (61-80)
[தொகு](எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
பாடல்: 61 (மன்னுகின்ற)
[தொகு]- மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும் வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
- பன்னுகின்ற தொழிலைந்துஞ் செய்திடவே பணித்துப் பண்புறவென் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
- உன்னுகின்ற தோறுமெனக் குள்ளமெலாம் இனித்தே ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
- மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே மெய்யுமணிந் தருள்வோயென் பொய்யுமணிந் தருளே!
பாடல்: 62 (நன்மையெ)
[தொகு]- நன்மையெலாம் தீமையெனக் குரைத்தோடித் திரியும் நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
- புன்மையெலாம் பெருமையெனப் பொறுத்தருளிப் புலையேன் பொய்யுரைமெய் யுரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
- தன்மையெலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும் தரித்தருளி ஐந்தொழில்செய் சதுரளித்த பதியே
- இன்மையெலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப்பொதுவில் இலங்குநடத் தரசேயென் இசையுமணிந் தருளே!
பாடல்: 63 (விழுக்குலத்தார்)
[தொகு]- விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன் மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
- முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பே ரொளியே
- எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
- மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும் மாநடத்தென் அரசேயென் மாலையணிந் தருளே!
பாடல்: 64 (கலைக்கொடி)
[தொகு]- கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன் கைதவனேன் பொய்தவமும் கருத்திலுவந் தருளி
- மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி மகனேநீ வாழ்கவென வாழ்த்தியவென் குருவே
- புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப் பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
- விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே விளங்குநடத் தரசேயென் விளம்புமணிந் தருளே!
பாடல்: 65 (மதமென்றும்)
[தொகு]- மதமென்றும் சமயமென்றும் சாத்திரங்களென்றும் மன்னுகின்ற தேவரென்றும் மற்றவர்கள் வாழும்
- பதமென்றும் பதமடைந்த பத்தரனு பவிக்கப் பட்டஅனு பவங்களென்றும் பற்பலவா விரி்ந்த
- விதமொன்றுந் தெரியாதே மயங்கியவென் றனுக்கே வெட்டவெளி யாவறிவித் திட்டவருள் இறையே
- சதமொன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில் தனிநடஞ்செய் அரசேயென் சாற்றுமணிந் தருளே!
பாடல்: 66 (என்னாசை)
[தொகு]- என்னாசை எல்லாம்தன் னருள்வடிவந் தனக்கே எய்திடச்செய் திட்டருளி என்னையுமுட னிருத்தித்
- தன்னாசை யெல்லாமென் னுள்ளகத்தே வைத்துத் தானுமுடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாவென் னாருயிரே அப்பாவென் னமுதே ஆவாவென் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவினடம் புரிகின்ற வரசே புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியுமேற் றருளே!
பாடல்: 67 (தன்னரசே)
[தொகு]- தன்னரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனியென் வசமாகித் தாழ்ந்தேவ லியற்ற
- முன்னரசும் பின்னரசும் நடுஅரசும் போற்ற முன்னுமண்ட பிண்டங்கள் எவற்றினுமெப் பாலும்
- என்னரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி இன்பவடி வாக்கியென்றும் இலங்கவைத்த சிவமே
- என்னரசே என்னுயிரே என்னிருகண் மணியே இணையடிப்பொன் மலர்களுக்கென் னிசையுமணிந் தருளே!
பாடல்: 68 (பரவெளியே)
[தொகு]- பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
- விரவியமா மறைகளெலாம் தனித்தனிச்சென் றளந்தும் மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
- உரலிலவை தேடியவவ் வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கியவவ் வெளிகளைத்தன் னுள்ளடக்கு வெளியாய்க்
- கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே கனிந்தநடத் தரசேயென் கருத்துமணிந் தருளே!
பாடல்: 69 (வெய்யலிலே)
[தொகு]- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியவக் கணத்தே மிகுநிழலும் தண்ணமுதும் தந்தவருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே அம்பலத்தென் னரசேயென் அலங்கலணிந் தருளே!
பாடல்: 70 (கொலைபுரிவார்)
[தொகு]- கொலைபுரிவார் தவிரமற்றை யெல்லாரும் நினது குலத்தாரே நீயெனது குலத்துமுதல் மகனே
- மலைவறவே சுத்தசிவ சமரசசன்மார்க்கம் வளரவளர்ந் திருக்கவென வாழ்த்தியவென் குருவே
- நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா நிலையும்விளங் குறவருளில் நிறுத்தியசிற் குணனே
- புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனிதநடத் தரசேயென் புகலுமணிந் தருளே!
பாடல்: 71 (உயிர்க்கொலையும்)
[தொகு]- உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தா ரல்லரவர் புறவினத்தார் அவர்க்குப்
- பயிர்ப்புறுமோர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
- நயப்புறுசன் மார்க்கமவர் அடையளவு மிதுதான் நம்மாணை என்றெனக்கு நவின்றவருள் இறையே
- மயப்பறுமெய்த் தவர்ப்போற்றப் பொதுவில்நடம் புரியும் மாநடத்தென் னரேசயென் மாலையணிந் தருளே!
பாடல்: 72 (வன்புடையார்)
[தொகு]- வன்புடையார் கொலைகண்டு புலையுண்பார் சிறிதும் மரபினரன் றாதலினால் வகுத்தவவர் அளவில்
- அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக அன்றியருட் செயலொன்றும் செயத்துணியே லென்றே
- இன்புறஎன் றனக்கிசைத்த என்குருவே எனைத்தான் ஈன்றதனித் தந்தையே தாயேஎன் னிறையே
- துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில் தூயநடத் தரசேஎன் சொல்லுமணிந் தருளே!
பாடல்: 73 (கொடியவரே)
[தொகு]- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும் குறித்திடுமோர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியிலதைப் பார்த்துகவேல் அவர்வருத்துந் துன்பம் பயந்தீர்த்து விடுகவெனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியுமுயர் முடியுமெனக் களித்தபெரும் பொருளே அம்பலத்தென் னரசேயென் னலங்கலணிந் தருளே!
பாடல்: 74 (தயையுடையார்)
[தொகு]- தயையுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
- நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி நண்ணுகவென் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
- உயலுறுமென் உயிர்க்கினிய உறவேயென் அறிவில் ஓங்கியபே ரன்பேயென் அன்பிலுறும் ஒளியே
- மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுமணி மன்றில் மாநடத்தென் அரசேயென் மாலையணிந் தருளே!
பாடல்: 75 (அருளுடையார்)
[தொகு]- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்க மடைந்தவரே ஆதலினா லவருடனே கூடித்
- தெருளுடைய வருள்நெறியில் களி்த்துவிளை யாடிச் செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே போதாந்த முதலாறும் நிறைந்தொளிரு மொளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில் வயங்குநடத் தரசேயென் மாலையுமேற் றருளே!
பாடல்: 76 (வெம்மாலைச்)
[தொகு]- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மானென் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்னாவிக் கான பெரும்பொருளே அம்பலத்தென் அரசேயென் அலங்கலணிந் தருளே!
பாடல்: 77 (ஆணவமாம்)
[தொகு]- ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை அணிமாயை விளக்கறையில் அமர்த்தியறி வளி்தது
- நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை யேற்றி நிறைந்தவருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
- மாணுறஎல் லாநலமும் கொடுத்துலக மறிய மணிமுடியும் சூட்டியவென் வாழ்முதலாம் பதியே
- ஏணுறுசிற் சபையிடத்தும் பொற்சபையின் இடத்தும் இலங்குநடத் தரசேயென் னிசையுமணிந் தருளே!
பாடல்: 78 (பான்மறுத்து)
[தொகு]- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே பகருமுல கிச்சையொன்றும் பதியாதென் னுளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய வைத்தபெரு வாழ்வேயென் வாழ்விலுறும் சுகமே
- மீன்மறுத்துச்சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே விண்ணனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே ஓங்குநடத் தரசேயென் னுரையுமணிந் தருளே!
பாடல்: 79 (மெய்ச்சுகமும்)
[தொகு]- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும் விளங்குபதச் சுகமுமதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகமாக எங்கணுமோர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா ததுதானாய் அதுவதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும் பொதுநடத்தென் அரசேயென் புகலுமணிந் தருளே!
- (மெய்ச்சுகம்- உயிர்ச்சுகம்- கரணச்சுகம்- பதச்சுகம்- வீட்டு்ச்சுகம்- பெருஞ்சுகம் -பொய்ச்சுகம் எனச் சுகங்கள் பலவகை)
பாடல்: 80 (அண்டவகை)
[தொகு]- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்தவுயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்டகுமோர் நாதவெளி சுத்தவெளி மோனவெளி ஞானவெளி முதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே குலவுநடத் தரசேயென் குற்றமுங்கொண் டருளே!
(நாதவெளி,சுத்தவெளி மோனவெளி ஞானவெளி முதலாகிய பலவெளிகள்)
- பார்க்க