உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடற்கரையில் கடும் போர்

203

நடந்தார். அப்படி நடந்தது நிரம்பவும் அலுப்பாக இருந்தமையால், அவர் அங்கிருந்த மரங்களின் அடியில் தமது அங்கவஸ்திரத்தை விரித்து குப்புறப் படுத்துக் கொண்டு, தமது சிரத்தை மாத்திரம் உயர்த்தி கடலை நோக்கிய வண்ணமிருந்தார்.

அவ்வாறே சிறிது நேரம் கடலின் அமைப்பையும், அழகையும் ஜனங்கள் உல்லாஸமாகப் போனதையும் பார்த்துக் கொண்டே அவர் படுத்திருந்தார். யௌவன ஸ்திரீ புருஷர் நிரம்பவும் சந்தோஷமாகப் போனதைக் காண, அவரது மனதில் மல்லிகாவின் நினைவு உண்டாயிற்று. முதலில் அவளை வஸந்தராவின் மோக வலையிலிருந்து தப்புவித்தது அவரது மனதில் தோன்றியது, யாதொரு கவலையும் இல்லாமல் எங்கேயோ இருந்த மல்லிகாவின் மனதைக் கலைத்து அவளை வஞ்சித்து அழைத்து வந்ததிலிருந்து, அவளுக்கும் தங்களைப் போன்ற பிறருக்கும் உண்டான துன்பங்களைப் பற்றி நினைத்தார். "படுபாவி அந்த வஸந்தராவ் செய்த மோசத்தினால், எத்தனை குடும்பங்கள் நிலை குலைந்தன! எத்தனை புருஷர் வருந்தித் தவிக்கின்றனர். மல்லிகாவின் துன்பத்திற்கெல்லாம் அந்தப் பாதகனே காரணமானவன்! அவனை என்றைக்காவது நான் காண்பேனானால், அவனுடைய உயிரை வாங்காமல் விடுவதில்லை " என்று தமக்குள் பலவாறு நினைத்து வஸந்தராவின் மீது பகைமை பாராட்டிக் கொண்டிருந்தபோது, வஸந்தராவைப் போல ஒருவன் கடலோரத்தில் போனதைக் கண்டார். முதலில் சிறிது நேரம் அந்தத் தோற்றம், தமது மனதின் நினைவினால் உண்டான மனோபாமான பொய்த் தோற்றமோ என்று அவர் நினைத்தார்.

ஆனால், அந்த மனிதன் அலைகளை நோக்கி மெல்ல நடந்து போக அவருக்கு அது மனோபாவத் தோற்றமல்ல என்பது நிச்சயமாயிற்று. அவர் உடனே எழுந்து உட்கார்ந்து அந்த மனிதனை உற்று நோக்கினார். அவன் வஸந்தராவைப் போல் இருந்தாலும், நிரம்பவும் இளைத்துத் தளர்வடைந்து இருந்தமையால், சிறிது சந்தேகம் உண்டாயிற்று. யௌவனமும் அழகும் பொருந்திய வஸந்தராவ், அவ்விதம் வயது முதிர்ந்த கிழவனைப் போல இருக்க மாட்டாரே என்று மோகனராவ் நினைத்தார். "அந்த வஞ்சகன் மாத்திரம் இங்கே அகப்பட்டுக் கொண்டால், அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/221&oldid=1233998" இலிருந்து மீள்விக்கப்பட்டது