28-வது அதிகாரம்
கூட்டி வைக்கும் தரகர்
பீமராவ் வீட்டை விட்டுப் போனவுடன் தமயந்தி தான் மறுபடியும் வருவதாகச் சொல்லிவிட்டு ஸகாராம் ராவோடு வெளியிற் செல்ல, கிருஷ்ணவேணியும் ஏதோ அவசர வேலையின் நிமித்தம் வெளியில் சென்றாள். மோகனராவ், ஒரு மூலையில் தளர்வடைந்து நின்று கொண்டிருந்த மல்லிகாவிடம் நெருங்கி, "மல்லிகா! உனக்கும் இப்போது சம்பவித்த விஷயங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னவென்பதை நீ அறிந்து கொண்டாயா?" என்று சந்தோஷமாக வினவினார்.
அவர் தனது உண்மையான பெயரைச் சொல்லி அழைத் ததைக் கேட்ட மல்லிகா திடுக்கிட்டு நிமிர்ந்து, "எனக்கொன்றும் தெரியவில்லையே! எல்லாம் கனவு போலிருக்கிறதே! என் பெயர் மல்லிகா என்பது உண்மைதான். நான் பவானியம்மாள்புரம் ஜெமீந்தாரின் பேர்த்தி என்பதுதான் எனக்கு விளங்கவில்லை" என்றாள்.
மோக : அதுவும் உண்மைதான். உன் விஷயத்தில் தமயந்தி சென்ற சில நாட்களாக எவ்வளவு பாடுபட்டிருக்கிறாள் தெரியுமா? ஆகா! அவளுடைய சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வேன்! பீமராவ் செய்த வஞ்சகத்தை எல்லாம் கண்டுபிடித்து அவனுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட்டு நீதான் ஜெமீனுக்கு சொந்தக்காரி என்பதையும் நிச்சயப்படுத்தி விட்டாளே!
மல்லி : இது நிரம்பவும் விநோதமாகத்தான் இருக்கிறது! என்னுடைய தாய் இறந்தது எனக்குத் தெரியாது. என் தந்தை இறந்தபோது அவர் என்னை துக்கோஜிராவின் வசத்தில் ஒப்புவித்தார். அப்போதாவது அதன் பிறகாவது எங்களுக்கும் இந்த ஜெமீந்தாருக்கும் சொந்தம் என்று ஒருவராவது சொன்னதில்லை.