உள்ளடக்கத்துக்குச் செல்

வஞ்சிமாநகரம்/3. ஆந்தைக் கண்ணன்

விக்கிமூலம் இலிருந்து

3. ஆந்தைக் கண்ணன்

மேற்கே கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவில் தீப் பந்தங்களோடு கூடிய கொள்ளைக்காரர்களின் படகுகள் தெரிவதாகக் கடற்கரைப் பாதுகாப்புப் படையினர் வந்து தெரிவித்தபோது கொடுங்கோளுரில் பரபரப்பு அதிகமாகி விட்டது. அந்த நிலையில் குமரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அமைச்சர் பெருமானுடைய அழைப்பை ஏற்று உடனே வஞ்சிமாநகரம் செல்வதா அல்லது கொடுங்கோளூரிலேயே தங்கிக் கடற்கரையிலும் முகத்துவாரத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகமாக்குவதா? எதைச் செய்வது என்று சிந்தித்து மனம் குழம்பினான் அவன்.

அமைச்சருடைய கட்டளையை அலட்சியம் செய்தது போலவோ, புறக்கணித்தது போலவோ, விட்டுவிடுவதும் ஆபத்தில் வந்து முடியும் என்பது அவனுக்குத் தெரியும். அமைச்சர் பெருமானைச் சந்தித்துவிட்டு இரவோடிரவாகத் திரும்பிவிடலாமென்று அவன் எண்ணினான். படைக் கோட்டத்திலிருந்த வீரர்களையெல்லாம் ஒன்று சேர்த்து உடனே செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வஞ்சிமாநகர் புறப்பட்டான் அவன். புறப்படுவதற்கு முன் எப்படியாவது அமுதவல்லியைச் சந்திக்க வேண்டும் என்று அவன் முயன்ற முயற்சி வீணாகிவிட்டது. அந்த அகாலத்தில் இரத்தின வணிகருடைய மாளிகையைத் தேடிச் சென்று அவளைக் காண்பது முடியாத காரியம். தான் வஞ்சிமாநகர் புறப்படுகிற செய்தியையும் அவளறியச் செய்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.

முகத்துவாரத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் கொள்ளை மரக்கலங்கள் நெருங்கிவிட்டதாகத் தகவல் பரவிக் கொண் டிருந்தது. எனவே தலைநகருக்குப் புறப்படுவதற்கு முன் கொடுங்கோளுர்க் கடற்கரைக்குச் சென்று நிலைமையை நேரில் கண்டறிய வேண்டுமென்று தோன்றியது குமரனுக்கு. அவன் தலைநகருக்குப் புறப்பட்ட பயணத்தின் போதே போகிற வழியில் கடற்கரைப் பக்கமாகத் திரும்பினான். வாத்தியங்களின் ஒலிகளும், கீதங்களும் கேட்கும் கலகலப்பான கொடுங்கோளூர் வீதிகள் அன்று இருண்டு கிடந்தன. எங்கும் வெறிச்சோடிப் போயிருந்தது. கடற்கரை ஓரத்துச் சோலைகளும், மணல் வெளிகளும்கூட ஆளரவமற்று இருந்தன. கொடுங்கோளுர்ச் சேரமான் படைக்கோட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஆங்காங்கே புதர்களில் மறைந்து காவல் புரிந்த வண்ணம் இருந்தனர்.

படைக்கோட்டத் தலைவனான குமரனைப் பார்த்ததும் அவர்களில் சிலர் ஓடி வந்து வணக்கம் செலுத்தினர். கடலில் தொலை தூரத்தில் செம்புள்ளிகளாகத் தீப்பந்தங்கள் எரியும் மரக்கலங்கள் இருளில் மிதந்து வரும் ஒரு நகரம் போல் தெரிந்தன. பயந்த மனப்பான்மையோடு பார்ப்பவர்களுக்குக் கொள்ளிவாய்ப் பூதங்களே வாழும் பயங்கரமான தீவு ஒன்று மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருவது போல் தோன்றியது. அப்போது அந்தக் கொள்ளை மரக்கலங்கள் இருந்த இடத்தில் இருந்து கரையை நெருங்க எவ்வளவு காலமும் என்னென்ன முயற்சிகளும் தேவை என்பனவற்றையும் அனுமானம் செய்து தான் கரையிலே செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒப்பு நோக்கிச் சிந்தித்த பின்புதான் தலைநகருக்குப் போய்விட்டு வர அவகாசம் இருப்பதைத் தெளிந்தான் குமரன்.  கொடுங்கோளுரிலிருந்து வஞ்சிமாநகரத்துக்குப் பயணம் செய்யும் வேளையில் வாயு வேகமாகிப் பறக்கும் புரவி மீது அமர்ந்திருந்தாலும் மனம் அமைதி இழந்திருந்தது. சேர நாட்டுப் பேரமைச்சர் அழும்பில்வேள் என்ன கட்டளையிடுவாரோ - எவ்வெவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்வாரோ என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டே சென்றபடியினால் பயணத்தில் நினைவு அழுந்தியிருக்கவில்லை. முன்னால் சென்ற தூதர்களான வலியனும் பூழியனும் அமைச்சர் பெருமானிடம் என்ன கூறியிருப்பார்களோ என்ற தயக்கமும் அச்சமும் கூடக் குமரனிடம் இருந்தது. பேரரசரும் பெரும்படைத் தலைவரும் கோநகரிலிருக்கும் சமயமாயிருந்தால் இப்படி அமைச்சர் பெருமான் தன் வரைக்கும் கீழிறங்கிக் கட்டளையிடத் துணிந்திருக்கமாட்டார் என்பதைக் குமரன் உணர்ந்துதான் இருந்தான்.

வஞ்சிமாநகரம் நெருங்க நெருங்க அவன் கவலை அதிகரித்தது. கோட்டை கொத்தளங்களும் மாடமாளிகைகளும், கூட கோபுரங்களுமாக இரவின் விளக்கொளி விநோதங்களோடு வஞ்சிமாநகரம் தென்படலாயிற்று. வேளாவிக்கோ மாளிகையில் வந்து அமைச்சர் அழும்பில்வேளைச் சந்திக்குமாறு அவருடைய ஒற்றர்களும் தூதுவர்களுமான வலியனும் பூழியனும் கூறிவிட்டுச் சென்றிருந்ததை நினைவு கூர்ந்தபடியே நகருக்குள் நுழைந்தான் குமரன். தலைநகரத்தின் வீதிகள் திருவிழாக்கோலம் பூண்டவைபோல் தோன்றின. பேரரசர் தலைநகரத்தை விட்டுப் பல காத துரம் சென்றிருக்கும்போதே இப்படியென்றால் அவர் கோநகரில் இருந்தால் நகரம் இன்னும் எத்துணை மங்கலமாக இருக்கும் என்பதை எண்ணிக் கற்பனை செய்து பார்த்தான் குமரன். ஒளிமயமான இரத்தின வணிகர் வீதி, முத்துவணிகர் வீதி, பொன் வணிகர் வீதி முதலியவற்றைக் கடந்து பூக்களும் சந்தனமும், பிற வாசனைப் பொருட்களும் விற்கும் வீதியில் அமுதவல்லியை நினைவு கூர்ந்து வேளாளர் தெருக்களையும், அந்தணர் தெருக்களையும் கண்டபின் அரச வீதிகளில் புகுந்தான் குமரன். அரசவீதியின் நீளமும் அகலமும் இரு மருங்கிலும் நிரம்பியுள்ள - நிமிர்ந்து பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும் கட்டிடங்களும் குமரனை மருட்டின.

எங்கும் அகிற்புகை வாசனை, மாடங்களில் எல்லாம் விதவிதமான விளக்கொளிகள், அங்கங்கே மணியோசைகள், இனிய மங்கல வாத்தியங்களின் ஒலிகள், வேளாவிக்கோ மாளிகையும் அரண்மனையாகிய கனக மாளிகையும் அருகருகே இருந்தன. இரவு நேரமாக இருந்துங்கூட அரச கம்பீரம் நிறைந்த அந்த மாளிகைகளின் முன்றிலுக்கு வந்தவுடன் குமரனுக்கு மலைப்புத் தட்டியது. இரவில் யாரும் அடையாளம் கண்டு தன்னிடம் பேசவர வாய்ப்பில்லாத அந்த இடத்தில்கூட கட்டிடங்களின் பெருமிதத் தோற்றத்திற்கு முன் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தான் அவன்.

வேளாவிக்கோ மாளிகைக்குச் செல்லுமுன் பல அரங்க மேடைகளையும், அத்தாணி மண்டபங்களையும், வேத்தியல் நடனசாலைகளையும், பூங்காக்களையும், வாவிகளையும் கடந்து செல்லவேண்டியிருந்தது. கனக மாளிகையாகிய அரண்மனைப் பகுதிக்கும், வேளாவிக்கோ மாளிகைக்கும் இடையே அடர்ந்த மரத்தோட்டம் இருந்தது. அந்த மரக் கூட்டங்களுக்கு அப்பால் முகில்கள் மறைத்த வெண்மதிபோல் அழகிய வேளாவிக்கோ மாளிகை தெரிந்தது. வேளாவிக்கோ மாளிகையருகில் சிறிது தொலைவில் பேரரசரின் வசந்த மாளிகையாகப் பயன்படும் இலவந்திகை வெள்ளிமாடம் அமைந்திருந்தது. சேர அரசர்களோ, அமைச்சர் பெருமக்களோ தேர்ந்தெடுத்த காரியங்களை மட்டுமே வேளாவிக்கோ மாளிகையில் வைத்துப் பேசுவது வழக்கம். ஆந்தைக்கண்ணனின் கொள்ளைக் கூட்டத்தை ஒடுக்குவது பற்றித் தன்னிடம் பேசுவதற்கு அமைச்சர் வேளாவிக்கோ மாளிகையைத் தேர்ந்தெடுத்ததிவிருந்தே அதன் இன்றியமையாமையைக் குமரனும் உணர்ந்து கொண்டிருந்தான். வேளாவிக்கோ மாளிகைக்கு இதற்கு முன்பு எப்போதும் தனியாக அவன் வர நேர்ந்ததில்லை. பெரும்படைத்தலைவர் வில்லவன் கோதையோடு சேர்ந்து இரண்டொருமுறை வந்திருக்கிறான். வில்லவன் கோதை பேரரசருடன் குயிலாலுவத்துக்குச் சென்றிருந்ததனால் முதன்முதலாகத் தனியே வேளாவிக்கோமாளிகை என்னும் அரசதந்திரக் கட்டிடத்திற்குள் புகுந்து அமைச்சரை எதிர்கொள்ளும் வாய்ப்புக் குமரனுக்கு ஏற்பட்டிருந்தது. அமைச்சர் அழும்பில்வேள் அரச தந்திரப் பேச்சுக்களிலும் விவாதங்களிலும் வல்லவன் என்பதையும் குமரன் அறிவான். ஆனால் அவரை எண்ணி அவன் ஒரேயடியாக அஞ்சிவிடவில்லை. வேளாவிக்கோ மாளிகையை நெருங்கி அதன் முன்றிலில் புரவியை நிறுத்திவிட்டு உள்ளே போகிறவரை அவன் மனம் பரபரப்பாயிருந்தது. மாளிகை வாசலில் கொடுங்கோளூருக்குத் துதுவந்து திரும்பிய அமைச்சரின் ஒற்றர்கள் குமரனை எதிர்கொண்டார்கள். அவர்கள் தெரிவித்த செய்தி குமரனுக்கு ஓரளவு ஏமாற்றத்தை அளித்தது.

“ஐயா ! இப்போது அகாலமாகிவிட்டது. தங்களை அமைச்சர்பெருமான் நாளை வைகரையில் சந்தித்துப் பேசுவார். அதுவரை இந்த வேளாவிக்கோமாளிகையில் உள்ள விருந்தினர் பகுதியில் தங்கள் விருப்பப்படி களைப்பாறலாம்” என்றார்கள் அமைச்சரின் தூதர்கள். அமைச்சர் தன்னை வரச்சொல்லியிருந்த அவசர உணர்வு குமரனுடைய மனத்தில் தளர்ந்துவிட்டது. ஒற்றர்களான வலியனும் பூழியனுமோ, “ஆந்தைக்கண்ணன் கொடுங்கோளூர்க்கரையை நெருங்கி விட்டானாமே? கணக்கற்ற கொள்ளைக்காரர்களும், மரக்கலங்களும் உடன் வந்திருப்பதாகப் பேசிக் கொள்கிறார்களே? உண்மையா?” என்று கொள்ளைக் காரர் வரவு பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களிடமே இதையெல்லாம் பற்றிப் பேசலாமா கூடாதா என்ற தயக்கம் மேலிட்டு குமரன் மெளனமாக இருக்க வேண்டியதாயிற்று. வேளாவிக்கோ மாளிகை நடைமுறை களைப் பற்றியும், அமைச்சர் அழும்பில்வேள் மனிதர்களைப் பரீட்சை செய்து தேறும் விதங்களைப் பற்றியும் கொடுங்கோளுர்க் குமரன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். ‘தன்னிடம் பேசவேண்டிய செய்திகளைத் தனது ஏவலாளர்களிடமே பேசி முடித்துவிடுகிற ஒரு படைத் தலைவனைப் பற்றி அமைச்சர் அழும்பில்வேள் என்ன நினைப்பார்?’ என்பதை எண்ணியே அவன் நடுங்கவேண்டியவனாக இருந்தான். அவர்களோ அவனை மேலும் மேலும் சோதனை செய்தார்கள்.

“கொடுங்கோளுர் ஆந்தைக்கண்ணன் கையில் சிக்கிற்றானால் அதன்பின் சேரநாடே ஒன்றுமில்லை என்றாகிவிடும். எப்பாடுபட்டாவது முதலில் கொடுங்கோளுரைக் காப்பாற்றி விட வேண்டும். அதன் பெருட்டுத்தான் அமைச்சர் பெருமான் எங்கள் இருவரையும் அவ்வளவு அவசரமாக அனுப்பினார்” - என்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்கள். அதற்கெல்லாம் பிடிகொடுத்துப் பதில் கூறாத குமரன், “இவ்வளவு அவசரமாக என்னை வரவழைத்த அமைச்சர் பெருமான் இரவிலேயே எனக்கான கட்டளையை இட்டு என்னைக் கொடுங்கோளூருக்கு அனுப்பியிருப்பாரானால் மிகவும் நல்லதாகியிருக்கும். நான் அதிக நேரம் இங்கே தங்கத் தங்கக் கொடுங்கோளூர் நிலைமையைப் பற்றிய கவலைதான் என் மனத்தில் அதிகமாகிறது” - என்று மட்டும் பலமுறை அவர்களிடம் வற்புறுத்தி வினவினான். அதற்கு அவர்கள் கூறிய பதிலைக் கேட்டு அவன் திடுக்கிட்டான். ‘தங்களைப் போலவே கவலை மிகுந்து கொடுங்கோளூர் நிலைமையை அறிந்து வர அமைச்சர் பெருமானே அங்கே சென்றிருக்க நியாயமிருக்கிறதல்லவா?’ - என்று சிரித்துக் கொண்டே குமரனைக் கேட்டார்கள் அவர்கள். ‘விளையாட்டாக அப்படி அவர்கள் கூறுகிறார்களா? அல்லது தன்னை ஆழம் பார்க்கிறார்களா’ என்று புரியாமல் திகைத்தான் குமரன். “பேரமைச்சருக்குக் கொடுங்கோளுர் வரவேண்டுமென்ற உத்தேசம் இருந்திருக்குமானால் அடியேன் அங்கேயே அமைச்சர் பெருமானை எதிர்கொண்டு சந்தித்திருப்பேனே?” என்று  தேவைக்கு அதிகமான விநயத்துடனேயே - அவர்களைக் கேட்டான். உடனே அவர்கள் பேச்சு வேறு விதத்தில் மாறிவிட்டது.

“ஐயா படைத்தலைவரே ! அமைச்சர் பெருமான் எங்கே போயிருக்கிறார் என்று எங்களுக்கு உறுதியாக எதுவும் தெரியாது. தாமாகவே எங்கோ சென்று உண்மை கண்டறியும் நகர் பரிசோதனை நோக்குடன் அவர் புறப்பட்டுப் போயிருக்கிறார். எப்போதுமே உடனிருப்பவர்களாகிய எங்களைக்கூட உடன் அழைத்துச் செல்லவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். நாங்கள், அவர் கொடுங்கோளுருக்குச் சென்றிருக்கலாமோ என்று ஓர் அநுமானத்தில் கூறினோமே அன்றி உறுதி கூறவில்லை. ஒருவேளை அவர் வேறெங்காவது சென்றாலும் சென்றிருக்கலாம்” என்று அந்தப் பேச்சுக்குத் தனிச்சிறப்பு அளிக்காமல் அதைப் பொதுவாக்கி விட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு மேலும் குழப்பம் அடைந்தான் குமரன். அந்த விநாடியில் ஆந்தைக்கண்ணனைவிடக் கொடியவர்களாகத் தோன்றினார்கள் அவர்கள். மேலும் அதிக நேரம் வேளாவிக்கோ மாளிகை முன்றிலிலேயே அவர்களிடம் பேச்சை வளர்த்துக் கொண்டிராமல் தங்குவதற்காக விருந்தினர் பகுதிக்குச் சென்றான் குமரன். கவலை நிரம்பிய மனநிலையும், உறக்கம் வராத சூழ்நிலையுமாகக் கழிந்த அந்த இரவில் பலமுறை அவன் அமுதவல்வியை நினைவு கூர்ந்தான். அவளைநினைத்த சுவட்டோடு ஆந்தைக்கண்ணனின் கொள்ளை மரக்கலங்கள் கொடுங்கோளுரை நெருங்கி முகத்துவாரத்தில் புகுந்திருந்தால் என்னென்ன பயங்கரங்கள் விளையும் என்று விருப்பமில்லாமலே மனத்தினுள் ஒரு கற்பனை வளர்ந்து கிளைத்தது.