250
வஸந்தமல்லிகா
சோலையும், தோட்டமும் மாளிகையும் ஒவ்வொரு விஷயத்தை நினைப்பூட்டுகின்றன. என் மனசிலும் கண்ணிலும் நினைவிலும் சதாகாலமும் குடிகொண்டு தாண்டவமாடும் அந்தப் பேடன் னத்தை ஒருநொடியாவது நான் மறக்கப் பார்க்கிறேன். அவளது பித்தமே முற்றிப் போய்விட்டது. இந்தக்கொடிய விஸனக் குன்றைச் சுமந்து நான் இனி எப்படி என் வாழ்நாட்களைக் கழிக்கப் போகிறேன்! மித்திர ரத்தினமே! என்னுடைய விசனங் களை எல்லாம் சொல்லி, தங்களை உபத்திரவிப்பதை மன்னிக்க வேண்டும் - என்று மோகனராவைப் பார்த்து விசனத்தோடும், புன்சிரிப்போடும் மொழிந்தார்.
மோ : தாங்கள் சொல்வதைப் பார்த்தால், அவள் நிரம்பவும் நற்குணவதியாகவும், தங்களிடத்தில் ஆழ்ந்த பிரேமை கொண்டவளாகவும் இருக்க வேண்டும்.
வஸ : இந்தப் பதினான்கு லோகத்திலும் அவளுக்குச் சமமான ஸ்திரீ இருப்பாளா என்பது சந்தேகமே. அப்படிப்பட்ட பத்தரை மாற்றுப் பசுந்தங்கம்.
மோக : ஆனால் அவள் இறந்து போனது நிச்சயந்தானா?
வஸ : அதைப் பற்றிச் சந்தேகமென்ன? அவளுடைய பிரேதத்தை நான் என்னுடைய கண்ணால் கண்டேன். ஆனால்! என் கண் முன் நிற்கிறாளே என் அருமைக் கண்ணாட்டி! இந்த மாளிகை முதலியவை எனக்கில்லாமல் போவதே நல்லது. இந்த இடங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய நினைவு உண்டாகி, என்னை வதைக்கிறது - என்றார்.
அவ்வாறு இருவரும் உரையாடியவண்ணம் மாளிகைக்குள் நுழைந்தனர். சமுத்திரத்தைப் பார்த்த பக்கத்தில் அவர்கள் இருவருக்கும் இரண்டு அழகிய விடுதிகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இருவரும் அவற்றில் இறங்கினர். உடனே ஸகாராம் ராவ் வஸந்த ராவிடம் போய் நிரம்பவும் விசனமடைந்தவனைப் போலப் பாசாங்கு செய்து, "எஜமான்களே! தங்களுக்கு இவைகள் இல்லாமல் போவது எனக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது! தங்கள் விஷயத்தில் கிழவர் நிரம்பவும் அநியாயம் செய்து விட்டார்" என்றார்.