பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

பறம்பு நாட்டு வாழ்வுடை மக்கள் உணவின்றி வருந்தாதவர் என்பது முன்பு உரைக்கப்பட்டதன்றோ ஆகவே, அப்பறம்பு நல்ல தினை விளைவு உடையதாய் இருந்தது. நிழல் இல்லா ஒரு கனி மரம் நின்று, வழிப்போக்கர்க்கு உதவுவதுபோல, இவன் நாடும் பறம்பு மலையும் இரவலர்க்குப் பேருதவியாய் இருந்தன.

கபிலர் பறம்பு நாட்டைவிட்டுப் பிரிந்து சென்றாலும், தாம் பாரியின் நண்பராக இருந்த காரணத்தால், அப் பாரியின் மகளிரைத் தக்கோர்க்கு ஈயப் பெரும் பாடுபட்டுப் பல சிற்றரசர்கள்பால் எல்லாம் அழைத்துச் சென்றார். அச்சிற்றரசர்கள் இருங்கோவேள், விச்சிக்கோன் என்பவர்கள். அவர்கள் யாவரும் அம்மகளிரை மணக்க மறுத்தனர். அவர்கள் மறுத்தமைக்குப் பல காரணங்கள் இருப்பினும், ஒரு காரணமாகச் சொல்லக்கூடியது அம்மகளிர் மூவேந்தர்களின் பகைவனான பாரியின் மகளிர் என்பதே யாகும். அவர்கள் அம்முடியுடை மூவேந்தர்களுக்குத் தாம் பகைவர் ஆதல் கூடாது என்பதாம். என்றாலும், இறுதியில் கபிலர் அந்தணர் ஒருவர்க்கு இம்மகளிரை மணம் முடித்து, தம் கடமையை முடித்து மகிழ்ந்தனர்.

சி. ச.- 2