பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. வல்வில் ஓரி
ஓரி யாவன்?

ஓரி என்பவனும் வள்ளல் வரிசையில் வயங்கும் ஒருவன். இவன் வல்வில் ஓரி என்றும், ஆதன் ஓரி என்றும் அழைக்கப்படுபவன். இவன் கொல்லி என்னும் மலைக்கும், அதனைச் சார்ந்த இடங்கட்கும் தலைமைபூண்ட தகைமையாளன். இவன்பால் ஈகைப் பண்பு இயைந்து காணப்பட்டமையால், இவனைப் புலவர்கள் பாடிப் புகழ்வாராயினர் அப்படிப் பாடிய புலவர்கள் வன்பரணர் என்பாரும், கழைதின் யானையார் என்பாரும் ஆவர். இவ்விரு புலவர்களும் தனிப்பட்ட முறையில் இவனைக் குறித்துத் தனித்தனிப் பாடல்களை இயற்றியவர்கள். இவர்களே அன்றி, இவனையும் இவனைச் சார்ந்த ஏழு வள்ளல்களையும் புகழவந்த இடத்துப் பாடிய புலவர்கள் இருவர். அவர்கள், பெருஞ் சித்திரனாரும் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய புலவரும் ஆவர். பெருஞ் சித்திரனார் இவனைக் குறித்துப் பாடுகையில் “பிறங்குமிசைக் கொல்லியாண்ட வல்வில் ஓரி,” என்றனர். சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் "காரிக்குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரி,” என்று பாடியுள்ளனர். இங்ஙனம் ஓரி இப்புலவரால் சுட்டப்பட்டிருத்தலை நோக்கின், இவன் காரி என்பானுடன் போரிட்டவன் என்பதும், காரியென்பானிடம் இருந்த இவுளி காரிக் குதிரை என்பதும், ஓரி யிவர்ந்த குதிரை ஓரி என்பதும் இங்கு உணர்த்தப்பட்ட செய்கைகளாகும்